Pages

Nov 6, 2015

ஆயிரம் காக்கைக்கோர் கல்!


கீதமஞ்சரி வலைப்பதிவரும் Geetha Mathi முகநூல் பதிவருமாகிய சகோதரி கீதா 05.11.2015 முகநூல் பதிவாக  Clicks & Colours எனும் பக்கத்தில் நிழற்பட வல்லுநர் சகோதரர் அரவிந் அமிர்தராஜ் அவர்கள் வழங்கிய படத்துடன் பழமொழி நானூறுப் பாடலும் அதன் விளக்கமும் எனப் பதிவிட்டிருந்தார்.  அருமையான அப்பதிவு என்னை ஈர்க்கவே நானும் சில குறட்பாக்களை எழுதி இங்கு தருகிறேன். அவர்களின் அனுமதியுடனேயே இப்பதிவினை இடுகின்றேன்!
நிழற்படம் மற்றும் பாடற் பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரர்களே!

மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப
ஆயிரம் காக்கைக்கோர் கல்.

பொருள் – குறைகளேதுமற்ற மனத்தையும் நல்ல சிறந்த நலன்களும் அமையப்பெற்ற ஒரு மன்னன், தன் குடிமக்களிடத்தில் அன்புடையவனாக இருப்பானாயின்… அவனை அழிக்க எண்ணும் பகை மன்னர்கள் எவ்வளவோ முன்னேற்பாடுகளுடன் படை திரட்டி வந்தாலும் அப்படைகளால் ஆவதொன்றும் இல்லையாம்.. ஆயிரம் காக்கைகள் இருந்தாலும் ஒற்றைக் கல் எறிந்தாலே பறந்துவிடுவதைப் போல… அன்புடை மன்னன் முன்னால் எப்பேர்ப்பட்ட படையும் சிதறித் தெறித்து ஓடிவிடுமாம். எவ்வளவு அழகான பாடல்!


அழகான நிழற்படத்துக்குத் தகுந்த இந்தப் பழமொழி நானூறுப் பாடலை மிகுந்த அக்கறையுடன் தேடிப் பதிவிட்ட அன்புச் சகோதரி கீதாவின் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும்!. 
அவரின் ஆற்றலைக் கண்டு வியந்து நிற்கின்றேன்!
வாழ்த்துக்கள் சகோதரி!

அவர் இட்ட பாடலுக்குப் பொருந்துவதாக நான் எழுதிய குறட்பாக்கள் சில.

கல்லாற் கலைந்திடும் காக்கைகள்போல் தீதோட்டும்
நல்லுளத்தான் ஆட்சியில் நாடு!

கல்லால் கலைந்திடும் காக்கைகள்! பொல்லார்க்கு
நல்லார்முன் இல்லை நடை!

கல்கொண்டு காகம் கலைத்திடு! நல்லதோர்
சொல்கொண்டு சோகம் துடை!

பொல்லாச்சொல் போக்கும் உறவுகளை! இவ்வுலகில்
கல்லாலே காக்கை கலைத்து!

கல்லினால் காக்கை கலையும்! சுடுகின்ற
சொல்லினால் ஓடும் சுகம்!

கல்லொன்று போதும் கலைத்திடக் காக்கை!வன்
சொல்லாற்போம் நண்பர் தொடர்பு!

காக்கை கலைத்திடும் கல்போன்று! தீச்சொல்லும்
யாக்கை எரிக்கும் இழிந்து!

கல்லால் கலைந்திடும் காக்கைகள்போல், நல்லாட்சி
வெல்லும் பகையை விரைந்து!
~~~~~~~

வெளிநாட்டில் இருக்கும் வலைப்பதிவர்களுக்கு
ஓர் வேண்டுகோள்!!!

நீங்களும் வலைப்பதிவர் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளப் பதிவு செய்யும்படி கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா தனது பதிவிற் கூறியுள்ளார்! மேலதிக விபரங்களுக்கு அவரின் பதிவினைப் பார்க்க வேண்டுகிறேன்!
 
மிக்க நன்றி!


பதிவிற்கான நிழற்பட உதவி சகோதரர் அரவிந் அமிர்தராஜ் அவர்கள்.
மிக்க நன்றி!

51 comments:

 1. என்னவொரு உவமையுடன் கூடிய பழைய பாடல். அருமை. அதற்கேற்ற உங்கள் குறட்பாக்கள் மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   உடனோடி வந்து ஊக்குவிக்கும் உங்கள் ரசனை கண்டு
   உள்ளம் நெகிழ்கின்றேன்!

   சகோதரியின் அருமையான பாடற் பதிவின் சிறப்பை எப்படிச்சொல்லுவேன்!..
   என்னை ஈர்த்து இப்படி எழுதிடத் தூண்டிவிட்டது!

   தங்களின் அன்பு வரவிற்கும் கருத்திற்கும்
   உளமார்ந்த நன்றி சகோ!

   Delete
 2. கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அன்புச் சகோதரரே!

   அன்போடு உடன் வந்து ரசித்துக் கருத்துப் பகிர்வு செய்வது கண்டு மிகவே மகிழ்கின்றேன்.
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 3. ஆயிரம் காக்கைக்கோர் கல் எனும் பழமொழி நானூறு பாடலைத் தொடர்ந்த படமும் பதிவும் தங்களுடய குறட்பாக்களும் அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. வனக்கம் ஐயா!

   படமும் பாடற் பதிவும் கீதா மற்றும் அரவிந் அமிர்தராஜ் அவர்களுடையது.
   குறட்பாக்கள் மட்டுமே எனது முயற்சி!

   அன்பு வருகையும் வாழ்த்தும் கண்டு மனம் மகிழ்கின்றேன்.
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 4. ரசித்தேன் சகோதரியாரே
  வாழ்த்துக்கள்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்புக்கு மனமார்ந்த நன்றி ஐயா!

   Delete

 5. வணக்கம்!

  காக்கைக் கவிபடித்தேன்! கன்னல் சுவையென்றன்
  நாக்கை, மனத்தை நனைத்ததுவே! - பூக்..கை
  இளமதி தீட்டும் எழுத்தெல்லாம், பாட்டின்
  வளர்நிதி என்பேன் வரிந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!

   இளமதி பெற்றிடும் ஏற்றம் இதற்கு
   அளவேதும் உள்ளதோ ஐயா! - உளமதில்
   பொங்கும் உவகை புகன்றிடக் கூடுமோ!
   தங்கட்டும் நன்மை தளைத்து!

   தாங்களின் கற்பித்தற் கருணையே இளமதி காணும் உயர்வு!
   அதற்கு ஈடிணை இல்லை ஐயா!

   அன்பான வரவும் அழகான வெண்பா வாழ்த்தும் கண்டு
   உள்ளம் நிறைந்தேன்!

   என்றென்றும் என் உளமார்ந்த நன்றியைக் கூறுமென் நா!

   Delete
  2. வெண்பாக்களைப் படிக்கும்போது உவகை பொங்குகிறது.

   அதிலும் உங்கள் பதிலின் ஒவ்வொரு வரியும், 'குறளின் ஈற்றடி' போலே எனக்குத் தோன்றுகிறது. (நன்றியைக் கூறுமென் நா', 'இளமதி காணும் உயர்வு' 'உள்ளம் நிறைந்தேன் கண்டு')

   Delete
  3. ஓ.. அப்படியா சகோதரரே!..

   நன்றி! நன்றி! மிக்க நன்றி!

   Delete
 6. குறட்பாக்கள் மிக மிக அருமை... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 7. குறட்பா உள்பட அனைத்தும் அருமையான விடயங்கள் கவிஞரே
  தமிழ் மணம் 7

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 8. பாட்டரசன் வாழ்த்தியபின் வாழ்த்தேது.?
  கவிஞர்க்கு பொய் அவசியம் தான்...
  ஆனாலும் முழுநிலா இன்னும் இளமதியாயிருப்பதன் மர்மம் தான் விளங்கவில்லை...
  அருமை..அருமை..
  இன்னும் பல கல் ...பறக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே!

   முழுநிலாவானால் அதன் அடுத்த கட்டம் என்ன சகோதரரே!..
   இதில் ரகசியம் ஒன்றுமில்லை. இயற்கை தருகிற பாடம்தான்!

   இளமதியாய் இன்னும் வளர்ந்துகொண்டே
   இருக்கவே விரும்புகிறேன்!..:)

   தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 9. ரசனையான பதிவு!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 10. படத்துக்குக் கவிதையா? கவிதைக்குப் படமா? இரண்டும் ஒன்றை ஒன்று வென்று நின்று... கவிதை நன்று ம்மா. (இப்படி ஒரு அழகான வேலையைச் சகோதரி கீதா செய்கிறாரா? போய்ப்பார்க்கிறேன்) நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பகிர்வை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, மற்ற நம் நண்பர்களும் இவ்வாறு பகிர வேண்டி எனது தளத்தில் எழுதியிருக்கிறேன் சகோதரி. நன்றி.

   Delete
  2. http://valarumkavithai.blogspot.com/2015/11/blog-post_6.html

   Delete
  3. வணக்கம் ஐயா! தங்கள் வரவும் வாழ்த்தும் என்னையும்
   மிகவே மகிழ்விக்கின்றது!

   அனைத்தும் சிறப்பு!
   ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா!

   Delete
  4. மிக்க நன்றி சகோதரர் தனபாலன் அவர்களே!

   Delete
 11. இருவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா!

   Delete
 12. ஆஹா அருமை !! எளிய விளக்கங்களுடன் இலகுவாக புரிந்தது எனக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி அஞ்சு!

   Delete
 13. பழமொழி நானூறு பாடலுக்கு ஏற்ப உங்களது 8 குறட்பாக்கள் மிக அருமையாக,எளிமையாக எழுதியிருக்கிறீங்க இளமதி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நான் 4 புத்தகங்கள் எடுக்கிறேன் இளமதி. முன்பதிவை உங்களிடம் பதிந்துவைக்கிறேன்.

   Delete
  2. அன்பான பிரியா!
   அன்போடு வந்து ரசித்து கையேடு வேண்டுமென முற்பதிவு செய்தமைக்கும் வாழ்த்திற்கும் உளமார்ந்த நன்றி!

   Delete
 14. அருமை! குறட்பாக்களும் படமும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 15. குறட்பாக்களைப் பொருத்திய விதம் அருமை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!..
   தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி!

   Delete
 16. வணக்கம் சகோ !
  நல்ல காக்கைப் பாக்கள் அழகாய் இருக்கு
  மென்மேலும் தொடர்ந்து எழுத நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 17. அருமையான படம்.... பாடலும் நன்று.

  உங்கள் குறட்பாக்களையும் மிகவும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோதரரே!

   Delete
 18. படம் அழகு என்றால், அதற்கான பாடல், தங்க்ள் குறட்பாக்கள் எல்லாமே மிக அருமை...ரசித்தோம். சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரரே!

   Delete
 19. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
  நன்மை தரும் பொன்நாளாக அமைய
  வாழ்த்துகள்!

  யாழ்பாவாணன்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஐயா!

   Delete
 20. உங்களைத் தோழமையாய்ப் பெற்றதற்காகப் பெரிதும் மகிழ்கிறேன் தோழி... ஊற்றெனச் சுரக்கும் வெண்பாக்களால் உள்ளம் கவர்ந்தீர் வாழி.

  ReplyDelete
  Replies
  1. அன்புத் தோழியே!

   ஆற்றல்கள் உங்களது! அடியேன் அங்கிருந்து கொண்டுவந்து
   அதனோடு சேர்த்தேன் சிறிது!
   உங்கள் திறமையே எனக்கும் அடிக்கல்லாக அமைந்தது தோழி!

   உங்களுக்கு உளமார்ந்த்த நன்றியுடன் வாழ்த்துக்கள் தோழி!
   வீட்டில் உடல் நலக் குன்றல். பதிலிடத் தாமதமானேன்!..
   பொறுத்திடுங்கள்!

   Delete
 21. Replies
  1. வாருங்கள் வணக்கம் சகோதரியே!

   முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!
   நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete
 22. இளமதி அவர்கள் - என் பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என நினைத்தாலும் தவறில்லை.

  உங்கள் குறள் முயற்சி நன்றாகவே இருக்கிறது.

  'காக்கைகள் ஒரு கல்லால் கலைவது' என்ற உவமை, ஒரு நல்ல செயலால், பல தீமைகளை விரட்டிவிடலாம், சரியான முடிவு, பல தவறுகளைக் களைந்துவிடும், எத்தனை அயோக்கியர்கள் எதிர்த்தால் என்ன, ஒரு நல்லவனின் செய்கை, அவர்கள் அனைவரையும் வென்றுவிடும் என்பதுபோன்ற செயல்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தும். இதை மனதில் இருத்தும்போது சில குறள்கள் சிறப்பாக வரவில்லை.

  கல்லாற் கலைந்திடும் காக்கைகள்போல் தீதோட்டும்
  நல்லுளத்தான் ஆட்சியில் நாடு!

  இதில், 'காக்கைகள்போல்' - ரொம்ப பெரிதாக இருக்கிறது. 'தீதோட்டும்'-'தீதோடும்' என்று இருக்கவேண்டுமோ?

  கல்லால் கலைந்திடும் காக்கைகள்! பொல்லார்க்கு
  நல்லார்முன் இல்லை நடை! - சரியான பொருளைத் தருகிறது. பாராட்டுகள்.

  கல்கொண்டு காகம் கலைத்திடு! நல்லதோர்
  சொல்கொண்டு சோகம் துடை! - ஏன் காகத்தைக் கலைக்கவேண்டும்?

  பொல்லாச்சொல் போக்கும் உறவுகளை! இவ்வுலகில்
  கல்லாலே காக்கை கலைத்து! - பொதுவா, 'இரை கண்ட இடத்திலே'தான் காக்கைகள் கூடும். உறவுகளை காக்கைக்கு உவமை செய்வது சரியாக வரலை.

  கல்லினால் காக்கை கலையும்! சுடுகின்ற
  சொல்லினால் ஓடும் சுகம்! - சுகம் போவதால், சுடு சொல் சொல்லாதே. கல்லை எறிந்தால் காக்கை கலைவதைப்போல. காக்கைகளைக் கலைக்கக்கூடாதா?

  கல்லால் கலைந்திடும் காக்கைகள்போல், நல்லாட்சி
  வெல்லும் பகையை விரைந்து! - இதுதான் எனக்கு நல்ல Aptஆன குறளாகத் தெரியுது.'காக்கைகள்போல்'-இது சரி என்றால், குறள் perfect.

  எல்லாக் குறளுமே நல் முயற்சி. பாராட்டுக்கள்.

  விமர்சித்திருக்கிறேன் என்று எண்ணல் வேண்டாம். Not trying to discourage, but trying to encourage குற்றம் களைதல். தீட்டத் தீட்டத்தான் வாள் முனை கூர்மையாகும்.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோதரரே! வருக!

   தங்கள் பின்னூட்டங்கள் என்னைப் புடம்போடும் என்பதில் சந்தேகம் சிறிதேனும் இல்லை.
   ஆனால் இங்கு 4 நாட்கள் கிறிஸ்மஸ் லீவிற்குப் பின்னர் கடைகள் திறந்துள்ளன.
   ஷொப்பிங் செய்யவேண்டும். மற்றும் வீட்டிலும் விருந்தினர் வருகைதரவுள்ளனர்.
   நேரம் மிக அரிதாகிவிட்டது இப்போ எனக்கு.
   விரிவாக உங்களுக்குப் பதில்லெழுதத் தற்போது இயலவில்லை.
   மனம் வருந்துகிறேன். மீண்டும் வந்து ஒவ்வொன்றிற்கும் பதில் எழுதுவேன்.

   மகிழ்வுடன் நன்றிகள் பல சகோதரரே!

   Delete
  2. வீட்டிற்கு விருந்தினர் வந்து தங்கிச் சற்று முன்னர் தான் கிளம்பினார்கள்.
   அதனால் உங்களுக்கு இங்கிடும் பதிலும் தாமதமாகிவிட்டது சகோதரரே!
   மன்னிக்கவேண்டும்.

   சரி விடயத்திற்கு வருகிறேன்....

   //கல்லாற் கலைந்திடும் காக்கைகள்போல் தீதோட்டும்
   நல்லுளத்தான் ஆட்சியில் நாடு!

   இதில், 'காக்கைகள்போல்' - ரொம்ப பெரிதாக இருக்கிறது. 'தீதோட்டும்'-'தீதோடும்' என்று இருக்கவேண்டுமோ?//

   காக்கைகள் - காக்கைபோல் எனவும் வரலாம்.
   தீதோட்டும்/ தீதோடும். இங்கும் கால்லால் கலையும் காக்கைபோல் நல்லுளத்தான் ஆட்சிதான் தீதினை இல்லாமற் செய்கிறது என பொருள்படப் பாடினேன்..

   //கல்லால் கலைந்திடும் காக்கைகள்! பொல்லார்க்கு
   நல்லார்முன் இல்லை நடை! - சரியான பொருளைத் தருகிறது. பாராட்டுகள். //
   நன்றி!

   //கல்கொண்டு காகம் கலைத்திடு! நல்லதோர்
   சொல்கொண்டு சோகம் துடை! - ஏன் காகத்தைக் கலைக்கவேண்டும்? //

   காகம் கலைப்பதற்குக் கல் எப்படி உபயோகமானதோ
   சோகம் துடைக்க நல்ல சொல் எனப் பாடினேன்.

   //காகத்தை ஏன் கலைக்க வேண்டும்?//
   இங்கு காகம் சோகத்திற்கு ஒப்பானது..:)
   காகமும் சோகமும் எப்படி ஒப்பானது என்றெல்லாம் கேட்காதீர்கள் ஐயா!
   நான் கற்றுக்குட்டி அழுதுடுவேன்.. அவ்வ்வ்வ்வ்..:(
   அன்றைக்கு என் மனத்தில் ஓடியது அப்படி. அவ்வளவே!...:))

   அடுத்து....
   //பொல்லாச்சொல் போக்கும் உறவுகளை! இவ்வுலகில்
   கல்லாலே காக்கை கலைத்து! - பொதுவா, 'இரை கண்ட இடத்திலே'தான் காக்கைகள் கூடும். உறவுகளை காக்கைக்கு உவமை செய்வது சரியாக வரலை.//

   ஒரு கல்லாலேயே வந்தமரும் காக்கைகள் கலைவதுபோல வருகின்ற வந்த உறவினர் பொல்லாச்சொல் கேட்டால் போய்விடுவார்களே!
   இங்கு நல்ல கோடைகாலத்தில் பெரீய பெரீய மரங்களில் மாலையானதும் காக்கைகள் கூடங்கூட்டமாக வந்தமர்ந்து கரைந்து ஒன்றையொன்று தீட்டித்தீர்த்தோ இல்லை சேர்த்தணைத்தோ கொள்வதுண்டு. அப்படியே அந்தந்த மரக்கொப்புகளில் இரவு தூங்கிவிடும்.
   இதனை யாரும் கல்லால் அடித்தால் கலையுமே. மாலையில் அம்மரத்தடிக்கு வருகிற காக்கைகள் இரைக்காக வருவன அல்ல!

   //கல்லினால் காக்கை கலையும்! சுடுகின்ற
   சொல்லினால் ஓடும் சுகம்! - சுகம் போவதால், சுடு சொல் சொல்லாதே. கல்லை எறிந்தால் காக்கை கலைவதைப்போல. காக்கைகளைக் கலைக்கக்கூடாதா?//

   எல்லாக் குறள்களுக்கும் பொதுவாகக் காக்கையும் கல்லும்தான் பொதுப் பொருள்.
   இதனை வைத்துக் கொஞ்சம் எழுத்திப் பார்த்தேன் சகோதரரே!
   ஆழ்ந்து அர்த்தம் கொள்ளவில்லை...:)

   ஆனாலும் இப்படியெல்லாம் சிந்திக்கவும் வேண்டுமென தங்களின் ஆய்வின்பின்னர் இப்போது புரிந்துகொண்டேன்.

   சகோதரரே!..
   வரவேற்கிறேன் தங்கள் கூற்றுகளை.
   தங்கள் நுணுக்கமான பார்வையும் தரும் பின்னூட்டமும் எனக்கு வருத்தத்தை தரவில்லை!..
   மாறாக என்னைப் புடம் போடுகின்றன தங்களின் அலசல்கள்!!
   வாழ்த்துக்களை ஏற்று மகிழ்வதுபோல இப்படியான அலசல்கள், சுட்டிக்காட்டுதல்களையும் உளமார ஏற்றுக்கொள்கிறேன்.

   //விமர்சித்திருக்கிறேன் என்று எண்ணல் வேண்டாம். Not trying to discourage, but trying to encourage குற்றம் களைதல். தீட்டத் தீட்டத்தான் வாள் முனை கூர்மையாகும்.//

   அதே.. அதே.. சபாபதே!..:))

   மிக்க மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

   Delete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_