Pages

Nov 25, 2015

வணங்குகின்றோம் வாசலிலே!..


காந்தள் மலர்கொய்து கண்களால் நீர்தெளித்து
ஏந்தியநெய்த் தீபமொடு  ஈகைச்சுடர் ஏற்றவந்தோம்!
வேந்தன் வழிவந்த வேங்கைகளே! தூங்கவேண்டாம்!
போந்து வணங்குகிறோம்! போற்றும் மறம்தருவீர்!

சாந்திசாந்தி என்றேதான் சாதுக்கள் சாற்றுவது
மாந்தரை மாய்க்க மணியடிக்கும் மந்திரமாம்!
நீந்திக் கரைசேர்வோம்! நிலமொன்றே நம்மூச்சாய்!
காந்தன் மண்காப்போம்! கண்கள் திறந்திடுவீர்!

நல்லரசு நாமமைத்து நம்மைநாம் ஆளவே
பல்வகைச் சாதனைகள் படைக்க வரமருள்வீர்!
இல்லையெனச் சொல்வானோ எம்நாட்டை அக்கொடியன்
எல்லை சமைத்திடுவோம்! என்றும் உடனிருப்பீர்!

சொல்லில் அடங்குமோ சோதரரே உம்மீகை!
புல்லும் சிலிர்த்திடுமே! போர்க்காலம் எண்ணுகையில்!
வெல்வோம் தமிழீழம்! வீரர்களே கண்..திறப்பீர்!
வல்லமை தாருங்கள்! வணங்குகின்றோம் வாசலிலே!
~~~~~~~~~~~

தமிழர்க்கென்று ஒரு நிலமெனில் அது தமிழீழம் ஒன்றே என்று
அனைத்து வழிகளிலும் போராடித் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திட்ட ஈழ அன்னையின் அருமைச் செல்வங்கள் அனைவரையும் நெஞ்சில் நிறுத்தி, அவர்கள் நினைவிற் கரைந்து மௌனமாய் வணங்கி நிற்கின்றேன்!...

கவிதைப் பட உதவி கூகிள்! நன்றி!

17 comments:

 1. சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

  இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

  ReplyDelete
 2. உணர்வுபூர்வமான கவிதை
  இரசித்துப்படிக்க மெய் சிலிர்த்தது உண்மை
  வீணை செய்யும் ஒலியிலிருப்பவள்
  தங்கள் உள்ளத்திலும் நிறைந்திருக்கிறாள்
  இல்லையெனில் இத்தனை அற்புதமான கவிதைகள்
  பிறப்பது அரிது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //சொல்லில் அடங்குமோ சோதரரே உம்மீகை
  சிலிர்த்திடுமே புல்லும் எண்ணுகையில் போர்க்காலம்
  தமிழீழம் வெல்வோம் கண்… திறப்பீர் வீரர்களே//

  வேதனையின் உச்சம் நானும் வணங்குகிறேன் கவிஞரே..
  தமிழ் மணம் 4

  ReplyDelete
 4. வெல்வோம் தமிழீழம்..
  அது நிச்சயம்!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 5. நிச்சயம் வெல்வோம் அம்மா....

  ReplyDelete
 6. மனம் கனக்கிறது தோழி. இனியேனும் நல்லது நடக்கட்டும்:((

  ReplyDelete
 7. நல்லது சீக்கிரமே நடக்க நாளும் வேண்டுவோம்.

  ReplyDelete
 8. நல்லது நடக்கட்டும்
  அருமையான கவிதை சகோதரியாரே
  நன்றி
  தம+1

  ReplyDelete
 9. உங்கள் ஈழப்பற்று சிலிர்க்க வைக்கிறது/ பாடல் அருமை.

  ReplyDelete
 10. வணக்கம் சகோ !

  அற்புதப் படையல் உங்கள் கவிதை உள்ளுணர்வுகளை உரசிச் செல்கிறது காலத்தின் தேவைகள் இன்று காணாமல் போனதால்
  கண்ணீருக்குள் நம் ஈழ தேசம் !

  அருமையான வலிமிகுந்த வரிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
  தம +1

  ReplyDelete
 11. வணக்கம்.நன்று!

  ReplyDelete
 12. வணக்கம் கவிஞரே!தொடர்ந்து எழுதுங்கள்,விடுதலையைப் பாடுங்கள்! உங்கள் எழுத்துக்குள் இருந்து வரும் உண்மைகள் இந்த உலகத்தை ஆளட்டும்!

  இன்றெம் தேசியத் தலைவரின் பிறந்தநாள்.
  உலகம் எங்கும் வாழும் தமிழர்களின் இதயம்
  நிறைந்த பிரபாகரன் என்ற பெருந்தாயின்
  பிறந்த நாளில் பெருமை கொள்கின்றோம்!

  "காலம் தந்த கொடையவன்!
  கருணை கொண்ட மொழியவன்!
  அடிமைப் பட்ட தமிழரை
  அணைத்துக் காத்த தாயவன்!

  எட்டுத் திக்கும் உள்ளவர்
  தம்மைத் தலைவர் என்கினும்
  இவனைப் போன்ற ஒருவனை
  இந்த உலகம் கண்டதுண்மையோ!

  ReplyDelete
 13. அருமையான வரிகளம்மா,,
  தொடருங்கள், நன்றிமா

  ReplyDelete
 14. நன்மை நடந்திட நாளும் பிரார்த்திப்போம்...அருமையான வரிகள் ஆனால் வேதனையையும் பேசின..

  ReplyDelete
 15. அன்புள்ள சகோதரி,

  வெல்வோம் தமிழீழம்! வீரர்களே ‘கண்’திறப்பீர்!

  அருமை!

  த.ம.8

  ReplyDelete
 16. கவிதை மனம் கனக்க வைக்கிறது! நல்லது நடக்கும் விரைவில்!

  ReplyDelete
 17. வணக்கம்!

  மாவீரர் மாண்புகளை வாரிப் படைக்கின்ற
  பாவீரர் உம்மைப் பணிகின்றேன்! - நாவீரர்
  ஓடி ஒளியட்டும்! ஒண்டமிழ்ப் போர்ப்படை
  பாடி நடக்கட்டும் பாய்ந்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete

உங்களின் அன்பான வரவிற்கும் ஊக்கந்தரும்
இனிய கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி! _()_