Pages

Jun 21, 2014

தோழமை தந்த தொடர்!..


என்னைத் தொடரெழுத இங்கிசைத்த தோழிகிரேஸ்!
இன்னிதய வாழ்த்துகளை ஈந்தேனே! - மண்ணில்
மனநலம்நாம் பேண வலைப்பூவிற் சீராய்த்
தினம்செய்வோம் சேவைதனைத் தேர்ந்து!
~~~~~~~~~~~~

தேன் மதுரத் தமிழ் வலைப் பதிவர் தோழி கிரேஸ் அவர்களின்
வேண்டுகோளிற்கு இணங்க இந்தக் கேள்விக் கணைகளுக்கு
நானும் விடையளித்துள்ளேன்.

தங்களின் கருத்தை இயம்பிட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி அன்புத் தோழி கிரேஸ்!
உறவுகளே! உங்களுக்கும் என் உளமார்ந்த இனிய நன்றி!
~~~~~~~~~~~


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?

இருக்கும் அகவை இதுபோதும்! நுாறு
வெறுக்க எனைச்செய்யு மே!  

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றிட வேண்டும் கனிவுடன் வாழ்வினில்
பெற்றிட வேண்டுமே பேறு!

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சிரிப்பை மறந்தேதான் சென்றதென் வாழ்வே!
எரித்ததே என்விதி இங்கு!

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இங்கெமக்கே என்றும் இருந்திடும் மின்சாரம்!
தங்குதடை இல்லையெனச் சாற்று!

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

உண்மையொடு நேர்மையும் ஊறில்லா வாழ்க்கையும்
மென்மையும் கொள்வீர் மிளிர்ந்து!

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

இல்லாமை என்பதை இல்லாது செய்தேநான்
வல்லமை கொள்வேன் வளர்ந்து!

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

என்நலம் காக்கும் இனியவர் கூறிடும்
நன்னெறி கேட்பேன் நயந்து!

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?

ஏற்றம் இறக்கம் இயல்பெனக் கொண்டேதான்
தேற்றுவேன் என்னைத் தெளிந்து!

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

எளிதோ இழப்பு? மனமும் தெளிய
விளக்குவேன் வாழ்வை விரித்து!

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஏகாந்தம் ஆயின் இனிமையே என்றனுக்கு!
பாகாகப் பாடுவேன் பா!
~~~~~~~~~


அன்புத் தோழர்களே!...
அழைக்கின்றேன் தொடரிதனைத் தொடர்கவென...

என் பக்கம்  அதிரா   http://gokisha.blogspot.de/

காகிதப் பூக்கள்  அஞ்சு   http://kaagidhapookal.blogspot.de/

இது இமாவின் உலகம்  இமா  http://imaasworld.blogspot.de/

பிரியசகி  அம்மு http://piriyasaki.blogspot.de/

மகி ஸ்பேஸ்  மகி   http://mahikitchen.blogspot.de/

என்னுயிரே  சீராளன் http://soumiyathesam.blogspot.com/  

ஊமைக்கனவுகள்  http://oomaikkanavugal.blogspot.de/

சித்ராஸ்ப்ளொக் சித்ராசுந்தர் http://chitrasundars.blogspot.de/

முத்துக்குவியல் மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot.de/

சிட்டுக்குருவி  விமலன்   http://vimalann.blogspot.com/

மிக்க நன்றி அன்பு உறவுகளே!...
__()__

Jun 18, 2014

சிறக்கட்டும்!..


இலட்சியங்கள் தமைநோக்கி எண்ணங்கள் பறக்கட்டும்!
இனியதமிழ் மொழிகாத்து  என்னினத்தார் சிறக்கட்டும்!
அலைத்தழிக்கும் அவலமெலாம் அடியோடு மறையட்டும்!
அன்பாலே உலகமதில் அமைதியொளி நிறையட்டும்!

Jun 9, 2014

அன்னைக்குச் சமர்ப்பணம்!..

’’அம்மா இந்த வார்த்தையின் ஆழம், அதன் சிறப்புப் பற்றி யாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரினதும் உணர்விலும், உதிரத்திலும் தாயோடு உள்ள பாசம் நிச்சயம் கலந்திருக்கும்.

அப்படி எனக்கும் என் வாழ்வில் எல்லாமுமாக இருந்த என் ”அம்மா” என்னையும் இந்த மண்ணையும் விட்டுப் பிரிந்த நிகழ்வு என்னைத் தீராத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது...

இந்த வருட ஆரம்பத்திலேயே இருதய நோயின் தாக்கத்தினால் மிகவே போராடிய என் அன்னை, மார்ச் மாத நடுப்பகுதியில் ஒரு அதிகாலைப் பொழுதில் மீளாத் தூக்கத்தில்  ஆழ்ந்துவிட அவள் பிரிவு என்னை மாளாத் துயரத்திற்கு ஆளாக்கிவிட்டது. இந்நிலையில் வலையுலகிற்கு வரவோ எழுதவோ என்னால் இயலவில்லை. 

இப்பொழுதும் அந்தத் துயர நினைவுகளிலிருந்து விடுபட முடியாதபோதும் என் அன்பு நட்புகள் சிலரினது வேண்டுகோளிற்கும் மரியாதைக்குரிய ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின்  அன்புக் கட்டளைக்கும் இணங்கத் துயருலகால் மெதுவாக வெளியே வந்து வலையுலகை எட்டிப் பார்க்கின்றேன்...

மீண்டும் என் வலையுலகப் பதிவிடலின் ஆரம்பமாகச் சில குறட் பாக்களை எழுதி அவற்றை இங்கு என் அன்னைக்குச் சமர்ப்பணமாகப் பதிவேற்றியுள்ளேன். 

தொடர்ந்தும் உங்களின் இனிய கருத்துப் பகிர்வினை நல்குமாறு கேட்பதுடன், 
அன்புடன் எனைத் தேடிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.

***************

என் அன்னைக்கு!


அம்மா எனக்கூற அன்னை இனிஇல்லை!
இம்மா நிலமே இருள்!

திங்களும் மூன்று திரும்புமுன் ஆனதே!
மங்கலம் யாவும் மறைந்து!

விண்ணகம் நாடி விரைந்தனையோ அன்னையே!
என்னகம் வாட இருண்டு!

என்னுயிர் வாழ்ந்ததும் உன்அன்பால்! நீயின்றித்
துன்புறும் உள்ளம் துவண்டு!

எங்கெனக்கு ஆறுதலோ?  என்றுனைக் காண்பேனோ?
மங்குதே மாட்சிகள் மாய்ந்து!

மடிதாங்கி என்னை மகிழ்வித்தாய் உன்னை
விடிவெள்ளி என்றெண்ணும் விண்!

வினைதீர்ந்த தென்று விடைபெற் றனையோ?
இணையாய் எவருளர் இங்கு!

அமைதியில் உன்ஆத்மா ஆழ இரந்தேன்  
இமையுறங்காக் கண்களோ டே!

காட்டிய நல்வழி காத்திடுவேன் காசினியில்
நாட்டிடுவேன் நின்புகழை நான்!

அம்மா எனச்சொல்ல அன்புதான் ஊறுமே
பெம்மான் படைப்பினது பேறு!
 ************