Pages

Dec 29, 2014

புதியதோர் உலகம் செய்வோம்!..

எங்கள் ஆசான் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயாவின்
தலைமையில் 27.12.2014 சனிக்கிழமை நடைபெற்ற
திருஅருட்பா அரங்க நிகழ்வுக் கவியரங்கத் தலைப்பிற்கு
எழுதிய விருத்தப் பாமாலை!
---0---
எனது பாமாலையை அரங்கில் வாசித்துப்
பெருமை சேர்த்த கவிஞரும் என் அன்புத் தோழியுமாகி
திருமதி. அருணா செல்வம் அவர்களுக்கு
என் உளமார்ந்த நன்றி!
---0---
எண்சீர் விருத்தம் : காய் காய் மா தேமா

புதியதொரு உலகத்தைச் செய்ய வேண்டிப்
புறப்படுவீர் தோழர்களே கைகள் கோர்த்து!
விதியெனவே வாய்மூடிக் காலம் போக்கும்
வேடிக்கை நிலைதொடர வேண்டாம் வாரீர்!
கதியென்று கிடப்பதனாற் கடவுள் வந்து
கண்ணீரை மாற்றுவரோ? கடமை யோங்க 
மதியினையே நன்காய்ந்து இயங்க வேண்டும்!
மடமையெனும் முட்செடியை எரிக்க வேண்டும்!

Dec 24, 2014

வண்ணமிகு வதனமடி!..


அறுசீர் விருத்தம்: காய் காய் காய் காய் மா தேமா 

வண்ணமிகு வதனமடி வான்வெளியின் வெள்ளியடி
வாழ்வின் சீரே!
என்னைநீயும் அழைக்கையிலே ஏழிசையாய்க் கேட்குதடி
என்றன் சேயே!
கண்ணிமையைச் தான்சிமிட்டிக் காட்டுகின்ற வித்தைகளைக்
காணும் போது
பெண்ணிவளின் பிறப்பினிலே பெற்றவரம் நீ!.என்றே
பெருமை கொண்டேன்!

Dec 13, 2014

வண்ணப் பறவை நானாகி!..


வண்ணப் பறவை நானாகி
வானிற் பறக்கும் ஆசையுடன்
எண்ணச் சிறகைத் தான்விரித்தே
எழுதும் கவிதை கேளுங்கள்!
கண்ணிற் கண்ட காட்சியெலாம்
காற்றில் கலைந்து போய்விடும்முன்
விண்ணில் இருந்து கூறுகிறேன்
விழைந்து கேட்பீர் நண்பர்களே!

Dec 7, 2014

இன்னோர் ஆண்டில் இளையநிலா!..


எங்கள் தமிழர் மூச்சானாய்
இனிய தமிழே! என்னுயிரே!
திங்கள் போன்றே குளிர்மைதரும்
தேனே! அமுதே! பேரழகே!
பொங்கும் மகிழ்வை எந்நாளும்
பொழியும் சந்தக் கவிமழையே!
சங்கம் வளர்த்த என்தாயே!
தலைமேல் தரித்து வணங்குகின்றேன்!

மூன்றாம் ஆண்டில் இளையநிலா
முயன்றே வந்தாள் பாருங்கள்!
ஆன்ற கருத்தை அழகாக
அள்ளி அன்பாய்க் கூறுங்கள்!
ஊன்றாய் உங்கள் கருத்துக்கள்
உயர்த்தும் என்னை வாழ்வினிலே
ஈன்றாள் அன்னை இனியவளாய்
என்றன் மூச்சு தமிழுக்கே!
~~~0~~~

Nov 30, 2014

நினைவுகள்!..


எங்கள் ஆசான் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயாவின்
தலைமையில் இன்று 30.11.2014 நடைபெறும்
திருஅருட்பா அரங்க நிகழ்வுக் 
கவியரங்கத் தலைப்பிற்கு எழுதிய 
விருத்தப் பாமாலை!
 ~~~~~~~~~

Nov 22, 2014

மாவீரர் சோதி!..


நம் தமிழீழ மண்மீட்புக்காகத் தம் இன்னுயிரை
ஈந்த மாவீரர்களுக்கு என் நீங்கா நினைவோடு
இப் பாமாலையைச் சமர்ப்பிக்கின்றேன்!...
~^~~^~~^~

Nov 15, 2014

நன்றி கூறுகின்றேன்!..


வெற்றி கிடைத்ததாய் மெச்சிய செய்தியைப்
பெற்றதும் இன்றுநான் பேச்சிழந்தேன்! - கற்றவர்
ஊட்டிய நல்வித்தை ஊக்கமிது! என்..நன்றி
கூட்டினேன் கைகள் குவித்து!

Nov 12, 2014

பசுமை படர!..


பாரும் பசுமை படர்ந்தோங்கப்
பக்கத் துணையாய் ஒளிவேண்டும்!
நீரும் அதற்குக் குறையாமல்
நித்தம் கிடைத்தால் நிறைவாகும்!
வேரும் தண்டும் இலையரும்பும்
வேண்டும் வண்ணம் அவைபெருகி
யாரும் மகிழ்வு பெற்றிடவே
இயற்கை என்றும் அருளுகவே!

Nov 1, 2014

கண்மூடி வேண்டுகிறேன்!..


அன்பொன்றைத் தினம்வேண்டி ஏங்கும் நெஞ்சம்!
ஆழ்மனத்தில் பெரும்துன்பம் என்றும் தஞ்சம்!
இன்பொன்று சென்றதனை இதயம் மெல்லும்!
இழுத்துவிடும் உயிர்க்காற்றுக் கொதித்தே கொல்லும்!
மண்ணதனில் மாண்புறவே வாழத் தோன்றும்!
மலைபோல ஊழ்வினைகள் வந்தே ஊன்றும்!
கண்ணனவன் நல்வழியைக் காட்ட வேண்டும்!
கருணைமழை பொழிந்தென்னைக் காக்க வேண்டும்!

Oct 15, 2014

நல்லவரம் தா!..


பொன்வேண்டாம்! பாழும் பொருள்வேண்டாம்! பாடவொரு
பண்வேண்டாம்! இப்பணமும் வேண்டாமே! - என்றுமென்
இன்னுயிராம் பைந்தமிழ் ஓங்கவே நல்வரம்..தா!
என்னுயிரும் ஈவேன் இதற்கு!
**********

Oct 6, 2014

சிப்பிக்குள் முத்தொன்று!..

பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் விடயத்தில் தாய்மையும் ஒன்றாகும்!
அந்தத் தாய்மைப் பேற்றினை அடைந்து மகப்பேற்றுக்கு முன்
நிகழும் வளைகாப்பு வைபவத்தினைக் காணும்
என் உறவினத் தேவதையை
வாழ்த்தி எழுதிய வாழ்த்துக் கவிதைகள்!
~~~~~~~

Sep 29, 2014

யாதுமாகி நின்றாய்!..


எங்கள் ஆசான் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயாவின் இல்லத்தில்
28.09.2014 அன்று நடைபெற்ற திருஅருட்பா அரங்க நிகழ்வுக்
கவியரங்கத் தலைப்பிற்கு எழுதிய கவிதை!

Sep 18, 2014

நானும் கவிஞரா?.!..


வணக்கம்!

பல்கும் விருதுகள் பாவையுனைத் தேடி!சீர்
மல்கும் கவிதையுள் மகிழ்ந்தாடி! - நல்குகிறேன்
வல்ல கவிஞர் எனும்பட்டம்! வாழ்கவே
நல்ல தமிழ்காத்து நன்கு!

Sep 16, 2014

வலைப்பூக்கள் தந்த விருது!..


வலைப்பூ விருதாய் வலம்வந்த ஒன்றென்
தளம்பூக்கச் செய்யும் தழைத்து!

Sep 12, 2014

பொன்விழா வெண்பா!


பொன்விழா நூலில் புனையொரு பாவென்றே
என்னுளம் துள்ள இயம்பினீர்! - என்குருவே!
எண்ணி மகிழ்ந்தேன்! எழுதினேன் நின்புகழை
வெண்பாவில் தேனை விளைத்து!
*********

என்னாசிரியர்
பாட்டரசர் கி. பாரதிதாசனார்
பொன்விழா மலருக்காக எழுதிய வெண்பா!

Aug 28, 2014

கவிதைப் போட்டி - 2014!..

தீபாவளியை முன்னிட்டு சகோதரர் ரூபனும் ஐயா யாழ்பாவாணன் அவர்களும் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி - 2014
போட்டிக்கு நான் அனுப்பும் கவிதைகள்
படத்திற்கான கவிதை

பூக்கூடை உள்ளே!...

பூக்கூடை உள்ளே புதைந்த நினைவுகளாற்
பாக்கூடை ஆகும் படருலகம்! - தேக்கி
அடைத்தாலும் பொங்குவதேன் அற்றைக் கனவு?  
படைத்தாளும் தேவா பகர்! 

Jul 28, 2014

இன்சொல் தருமே இதம்!..

கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களிடம் யாப்பிலக்கணம் கற்கின்ற வகையில் சில தினங்களுக்கு முன்னர் அவரின் வலைத்தளத்தில் செய்யுள் இலக்கணம் என்ற பதிவுத் தலைப்பில் வெண்டளையால் வந்த அறுசீர் விருத்தம்! என 
இத்தகைய அறுசீர் விருத்தத்தினை எழுதும் இலக்கணத்தை எழுதியிருந்தார்.

Jul 23, 2014

என்னடா தூக்கம் எழு!!..

* பெங்களூருவில் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்...

Jul 20, 2014

உயர் தானம்!..


உயர்தானம் ஒன்று 
ஒப்பற்றதென்று செய்ய 
உற்றேன் பேராவல் 
உறவுகளே வழி சொல்வீர்!

உதிரமும் உறுப்புகள் தானம்
உலகறியும் அதனருமை! 
உன்னுகிறேன் மேலாக
உயிர்த் தானம் செய்திடவே!
உற்றேன் பேராவல்
உறவுகளே வழி சொல்வீர்!

பயிராகும் முன்னே 
பதைபதைக்கச் சிறாரின்
உயிர்காவு வாங்குகிறான் 
ஒற்றன் கூற்றன்!
பாலகர் சிறந்தே வாழ
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே வழி சொல்வீர்!

வயிறார உணவின்றி
வாடியே தினந்தினம்
சருகாகிச் செத்திடும்
ஏழையும் நீடு வாழ
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே வழி சொல்வீர்!

உடற்பலம் குன்றி நலங்கெடப்
பாயிலே நோயொடு வீழ்ந்து
சேயதும் துடிதுடிக்க
வாய்பிளந்திடும் தாய் வாழ
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே வழி சொல்வீர்!

நாடு மொழி இனம்காக்க
நலமெல்லாம் எமக்காகப்
போரிடுவார் தினமும்
போரினில் அவர்களுயிர்
போகாமல் நலம்வாழ நான்
உயிர்த் தானம் செய்ய வேண்டும்
உளமார விரும்புகிறேன்
உறவுகளே! வழி சொல்வீர்!

எத்தனையோ சாதனைகள்
இயற்ற எம்மால் முடிகிறதே!
இத்தரை மீதிலே.. இதையும்
எண்ணியே பார்த்தேன்!
ஏதும் வழி சொல்வீரா? இல்லை
ஏளனம்தான் செய்வீரா?

~~~~~~~~~~~பாரினில் பிறந்தோம் நன்றே!
பாரமாய் இருத்தல் வீணே!
வேரினை மறந்தே மண்ணில்
வாழ்ந்திடும்  மரமும் உண்டோ!
ஊரிலெம் உறவோ வாட
எம்நலம் தனைக்காப் போமோ?
சீரினை உணர்ந்தே சேவை
செய்யவே சிறப்பார் இன்றே!

*******


தித்திக்கத் தித்திக்கச் சேர்த்த கனவுகள்!
சித்திக்க வேண்டும் சிறந்து!

__()__

Jul 7, 2014

வெந்தது விளைந்திடுமோ?...


வெந்தது மண்ணில் விளைந்திடுமோ? - பாரில்
விந்தையில்லை இதை உணர்ந்திடுவீர்!
தந்திடும் பாடங்கள் பலபலவே - நன்கு
புந்தியில் கொண்டிட நலன்மிகவே!
 
விறகான மரமும் துளிர்ப்பதில்லை! – மனது
துறவானால் வாழ்வும் இனிப்பதில்லை!
இறந்தாலே மீதம் இருப்பதில்லை! - இதனை
மறந்தாலும் மாண்டது மீள்வதில்லை!

கடந்திட்ட நேரம்தான் திரும்பிடுமோ? - கண்ணாடி
உடைந்திட்டால் பிம்பத்தைக் காட்டிடுமோ?
கிடைத்திட்ட வாழ்க்கையும் விரைகின்றதே! - நீயும்
படைத்திடு பலன்களைப் புவிகாணவே!

மறைந்தாலும் உன்பெயரை ஊர்சொல்லுமே! - உணர்வு
உறைந்தாலும் உன்பணிகள் உறவறியுமே!
பிறந்தோர்கள் இங்கேயே இருப்பதில்லையே! – உலகில்
சிறந்தோராய்த் திகழச்செய் மிகுநன்மையே!
~~~~~~~~~


ஊக்கம் கொண்ட நற்பணிகள்!
உன்னைக் காக்கும் நல்வழிகள்!
நோக்கம் சீராய்க் கொண்டிடுவீர்!
நுட்பம் அறிந்து செயற்படுவீர்!
ஆக்கம் சேர்க்கும் புத்துணர்வே!
அன்பால் ஈட்டும் சிறப்புக்கள்!
தேக்கம் ஏனோ தெளியுங்கள்!
தேர்ந்த வாழ்வும் ஓங்கிடவே!
~~~~~~~

பழுதுபடா நல்வாழ்வு பார்போற்றும்! எண்ணும்
பொழுதெலாம் ஏற்றும் புகழ்ந்து!
*****உள்ளாடும் உன்நினைவு ஊனினைத் தானுருக்கத்
தள்ளாடும் என்மனம் தான்!

__()__

Jun 21, 2014

தோழமை தந்த தொடர்!..


என்னைத் தொடரெழுத இங்கிசைத்த தோழிகிரேஸ்!
இன்னிதய வாழ்த்துகளை ஈந்தேனே! - மண்ணில்
மனநலம்நாம் பேண வலைப்பூவிற் சீராய்த்
தினம்செய்வோம் சேவைதனைத் தேர்ந்து!
~~~~~~~~~~~~

தேன் மதுரத் தமிழ் வலைப் பதிவர் தோழி கிரேஸ் அவர்களின்
வேண்டுகோளிற்கு இணங்க இந்தக் கேள்விக் கணைகளுக்கு
நானும் விடையளித்துள்ளேன்.

தங்களின் கருத்தை இயம்பிட வேண்டுகிறேன்.
மிக்க நன்றி அன்புத் தோழி கிரேஸ்!
உறவுகளே! உங்களுக்கும் என் உளமார்ந்த இனிய நன்றி!
~~~~~~~~~~~


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
கொண்டாட விரும்புகிறீர்கள்?

இருக்கும் அகவை இதுபோதும்! நுாறு
வெறுக்க எனைச்செய்யு மே!  

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றிட வேண்டும் கனிவுடன் வாழ்வினில்
பெற்றிட வேண்டுமே பேறு!

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

சிரிப்பை மறந்தேதான் சென்றதென் வாழ்வே!
எரித்ததே என்விதி இங்கு!

4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இங்கெமக்கே என்றும் இருந்திடும் மின்சாரம்!
தங்குதடை இல்லையெனச் சாற்று!

5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

உண்மையொடு நேர்மையும் ஊறில்லா வாழ்க்கையும்
மென்மையும் கொள்வீர் மிளிர்ந்து!

6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

இல்லாமை என்பதை இல்லாது செய்தேநான்
வல்லமை கொள்வேன் வளர்ந்து!

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

என்நலம் காக்கும் இனியவர் கூறிடும்
நன்னெறி கேட்பேன் நயந்து!

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்
என்ன செய்வீர்கள்?

ஏற்றம் இறக்கம் இயல்பெனக் கொண்டேதான்
தேற்றுவேன் என்னைத் தெளிந்து!

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

எளிதோ இழப்பு? மனமும் தெளிய
விளக்குவேன் வாழ்வை விரித்து!

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஏகாந்தம் ஆயின் இனிமையே என்றனுக்கு!
பாகாகப் பாடுவேன் பா!
~~~~~~~~~


அன்புத் தோழர்களே!...
அழைக்கின்றேன் தொடரிதனைத் தொடர்கவென...

என் பக்கம்  அதிரா   http://gokisha.blogspot.de/

காகிதப் பூக்கள்  அஞ்சு   http://kaagidhapookal.blogspot.de/

இது இமாவின் உலகம்  இமா  http://imaasworld.blogspot.de/

பிரியசகி  அம்மு http://piriyasaki.blogspot.de/

மகி ஸ்பேஸ்  மகி   http://mahikitchen.blogspot.de/

என்னுயிரே  சீராளன் http://soumiyathesam.blogspot.com/  

ஊமைக்கனவுகள்  http://oomaikkanavugal.blogspot.de/

சித்ராஸ்ப்ளொக் சித்ராசுந்தர் http://chitrasundars.blogspot.de/

முத்துக்குவியல் மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot.de/

சிட்டுக்குருவி  விமலன்   http://vimalann.blogspot.com/

மிக்க நன்றி அன்பு உறவுகளே!...
__()__

Jun 18, 2014

சிறக்கட்டும்!..


இலட்சியங்கள் தமைநோக்கி எண்ணங்கள் பறக்கட்டும்!
இனியதமிழ் மொழிகாத்து  என்னினத்தார் சிறக்கட்டும்!
அலைத்தழிக்கும் அவலமெலாம் அடியோடு மறையட்டும்!
அன்பாலே உலகமதில் அமைதியொளி நிறையட்டும்!

Jun 9, 2014

அன்னைக்குச் சமர்ப்பணம்!..

’’அம்மா இந்த வார்த்தையின் ஆழம், அதன் சிறப்புப் பற்றி யாரும் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரினதும் உணர்விலும், உதிரத்திலும் தாயோடு உள்ள பாசம் நிச்சயம் கலந்திருக்கும்.

அப்படி எனக்கும் என் வாழ்வில் எல்லாமுமாக இருந்த என் ”அம்மா” என்னையும் இந்த மண்ணையும் விட்டுப் பிரிந்த நிகழ்வு என்னைத் தீராத் துயரத்தில் ஆழ்த்திவிட்டது...

இந்த வருட ஆரம்பத்திலேயே இருதய நோயின் தாக்கத்தினால் மிகவே போராடிய என் அன்னை, மார்ச் மாத நடுப்பகுதியில் ஒரு அதிகாலைப் பொழுதில் மீளாத் தூக்கத்தில்  ஆழ்ந்துவிட அவள் பிரிவு என்னை மாளாத் துயரத்திற்கு ஆளாக்கிவிட்டது. இந்நிலையில் வலையுலகிற்கு வரவோ எழுதவோ என்னால் இயலவில்லை. 

இப்பொழுதும் அந்தத் துயர நினைவுகளிலிருந்து விடுபட முடியாதபோதும் என் அன்பு நட்புகள் சிலரினது வேண்டுகோளிற்கும் மரியாதைக்குரிய ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின்  அன்புக் கட்டளைக்கும் இணங்கத் துயருலகால் மெதுவாக வெளியே வந்து வலையுலகை எட்டிப் பார்க்கின்றேன்...

மீண்டும் என் வலையுலகப் பதிவிடலின் ஆரம்பமாகச் சில குறட் பாக்களை எழுதி அவற்றை இங்கு என் அன்னைக்குச் சமர்ப்பணமாகப் பதிவேற்றியுள்ளேன். 

தொடர்ந்தும் உங்களின் இனிய கருத்துப் பகிர்வினை நல்குமாறு கேட்பதுடன், 
அன்புடன் எனைத் தேடிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.

***************

என் அன்னைக்கு!


அம்மா எனக்கூற அன்னை இனிஇல்லை!
இம்மா நிலமே இருள்!

திங்களும் மூன்று திரும்புமுன் ஆனதே!
மங்கலம் யாவும் மறைந்து!

விண்ணகம் நாடி விரைந்தனையோ அன்னையே!
என்னகம் வாட இருண்டு!

என்னுயிர் வாழ்ந்ததும் உன்அன்பால்! நீயின்றித்
துன்புறும் உள்ளம் துவண்டு!

எங்கெனக்கு ஆறுதலோ?  என்றுனைக் காண்பேனோ?
மங்குதே மாட்சிகள் மாய்ந்து!

மடிதாங்கி என்னை மகிழ்வித்தாய் உன்னை
விடிவெள்ளி என்றெண்ணும் விண்!

வினைதீர்ந்த தென்று விடைபெற் றனையோ?
இணையாய் எவருளர் இங்கு!

அமைதியில் உன்ஆத்மா ஆழ இரந்தேன்  
இமையுறங்காக் கண்களோ டே!

காட்டிய நல்வழி காத்திடுவேன் காசினியில்
நாட்டிடுவேன் நின்புகழை நான்!

அம்மா எனச்சொல்ல அன்புதான் ஊறுமே
பெம்மான் படைப்பினது பேறு!
 ************

Jan 1, 2014

சங்கே முழங்கு!...

சங்கு எனது க்விலிங் கைவேலையில்!...
~~~~~~~~
அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!