Pages

Nov 23, 2013

மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!..

கார்த்திகைப் பூ எனது க்விலிங் கைவேலையில்...
~~~~~~~
கார்த்திகைப் பூத்தூவிக்
காத்திருப்போம் மாவீரரே!
பார்த்திருங்கள்! போற்றும் நம்மீழம்
புலருமே விரைந்து!
 _()_

மண்ணில் உறங்கிடும் வித்துக்கள்!
  

மண்ணில் உறங்கிடும் வித்துக்கள் - ஈழ
மறவர் எனும்தமிழ் முத்துக்கள்!
கண்ணாய்ப் போற்றிடும் சொத்துக்கள் – வீரம் 
கமழும் நறுமணக் கொத்துக்கள்!

வெல்லும் இலட்சியம் பாருங்கள் - யாவரும்
விரைந்தே ஒன்றெனச் சேருங்கள்!
சொல்லும் மந்திரம் கூறுங்கள் - உலகில்
துணிவாய் உரிமையைக் கோருங்கள்!

நாளை நமதெனப் பாடுங்கள் - வாழ
நன்னாள் நெருங்கிடும் ஆடுங்கள்!
காலைக் கதிரினைச் சூடுங்கள் - நம்
கடமை உணர்ந்துநடை போடுங்கள்!
~~~~~~~~~~~~


வானில் ஒளிர்கின்ற சூரியனை, வாழ்வினில்
வீணென எண்ணுதல் வீம்பு!
~~~~~~~~~~~

மண் காக்கத் தமையீந்த மாவீரர் நினைவான பதிவென்பதால்
இம்முறை பதிவோடு பகிரும் பதிவரை இணைக்கவில்லை...
_()_

Nov 15, 2013

விரைந்திடுக!...

கூகிளில் கண்ட ஓவியம் என் க்விலிங் கைவேலையில்!.

இது என்னவென்று தெரிகிறதா?...

தொடர்புபடுத்தி இதற்கென எழுதிய குறள் தருகிறேன்
கண்டுபிடியுங்கள்!..:)

கூட்டினுள் பூட்டிவிட்டோ குள்ளநரி கும்மாளம்
காட்டிடுமே தன்பலங் கோர்த்து!
~~~O~~~

விரைந்திடுக!...


தேடி அலைந்தேன் தினந்தினமே
தேனே! மலரே! கண்டதுண்டோ?
வாடி நிதமும் வலிகொண்டே
வாழ்ந்த தேசம் எண்ணுகிறேன் !
கூடி இருந்த சுற்றமெங்கே?
கூறக் கேட்போர் யாருமில்லை!
பேடி அங்கே கொல்லுவதைப்
பேச்சு இழந்தே பார்ப்பதுவோ?

கூவிக் களிக்கும் கோகிலமே
கூச்சல் ஏதும் கேட்கிறதா?
தீவில் நடக்கும் கொடுமைகளைத்
தீர்க உரக்கக் கூவிடுங்கள்!
மேவி அவனை வென்றிட்டே
மேன்மை யோடு வாழ்ந்திடலாம்
தாவிக் குதிக்கும் கொடியவனைத்
தாக்கி நாட்டை மீட்டிடுவோம்!

ஆவி சோர்ந்து போகுமுன்னே
ஆற்றும் கடமை மிகவுண்டு!
தேவி அன்னை துணைஉண்டு
தேடிப் பகைவன் தலைகொய்வோம்!
பாவி அவனை அழித்தால்தான்
பழியும் நீங்கி நாம்வாழ்வோம்!
கூவி அழைத்தேன் உறவுகளே
கூடி ஒன்றாய் விரைந்திடுக!
~~~~~~~

உதிக்கின்ற எண்ணங்கள் உள்ளத்துள் ஓங்க
பதிக்கின்ற பாக்களைப் பார்!
~~~O~~~

பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~

வலையுலகில் எனது அன்புக்குரிய சகோதரராகிய
  விமலன் அவர்களின் சிட்டுக்குருவி
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.


சகோதரர் விமலன் தனது வலைப்பூவில் சிறுகதை, கவிதை, சொற்சித்திரம், சமூகம்… என இன்னும் பல எழுத்தாக்கங்களைப் பதிந்துவரும் ஒரு ஆர்வமிக்க பதிவாளர்.
ஒரு நாளைக்கு ஒரு பதிவென்றில்லாமல் சிலசமயங்களில் இரண்டு மூன்று பதிவுகளைக்கூட தனது வலையிற் பதியும் ஒரு வேகமான பதிவர் விமலன் ஆவார்.

இவரின் சிறுகதைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு குறும்படம் பார்க்கும் உணர்வே தோன்றும். காட்சிகளை எழுத்தில் வடிக்கும் விதமே அலாதியானது. அதிலும் இயற்கைக் காட்சிகளை அத்தனை விருப்போடு மிக மிக அழகாக வர்ணித்து அதிலேயே ஒன்றித்து எழுதுவார்.

சகோதரர் தரும் கவிதைகளும் கருப்பொருள் சிறப்பாக இருக்கும்.

விமலன் அவர்கள் வலைச்சர ஆசிரியராகவும் கடந்த மாதங்களில் இருந்திருக்கின்றார்.

தன் பதிவுகளுக்கு தகுந்த அழகிய படங்களையும், அனிமேசன் காட்சிகளையும் சேர்த்துப் பதிவிடுவதில் ஆர்வமிக்கவர்.

எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் இயல்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே விமலன் அவர்களின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

விமலன் அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ஆயினும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்!..

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
_()_