Pages

Oct 31, 2013

உணர்வெனும் தீபம்!..


உள்ளத் தாமரையில்
உணர்வோடு ஏற்றும் தீபமாகக்
க்விலிங் கைவேலையில்...
~O~O~O~


உணர்வெனும் தீபம்!
~~~~~~~~

அரக்கனை மாய்த்தாய்! அகிலத்தைக் காத்தாய்!
சுரக்கும் அருளைச் சொரிந்தாய்! - உரக்கவே
கூவி அழைக்கின்றேன் கோகுலத்து நற்கண்ணா!  
தாவித் தகர்ப்பாய் தடை!

அடிமைத் தனத்தை அகற்ற! நலமாய்க்
குடிமை உயர்ந்து கொழிக்க! - விடிவினை
நாடி விளைக்க நறுங்கண்ணா செய்கவே!
கூடி மகிழ்வோம் குளிர்ந்து!

பொல்லார் உயர்ந்து புவியைச் சிதைப்பதோ?
நல்லார் நலிந்து கிடப்பதோ? - இல்லார்
நலங்காண  நல்குவாய் நாரணா! ஏழை
உளங்குளிரச் செய்வாய் உவந்து!

ஆற்றும் கடமை அறிந்தே அருந்தமிழைப்
போற்றி மகிழ்ந்து புகழ்பெறுவீர்! - ஊற்றெனப்
பொங்கும் உணர்வால் பொலிந்திடும் நல்வாழ்வு!
தங்கும் இனிமை தழைத்து!

தாக்கும் வறுமையைத் தள்ளி மிதித்திடுக!
பூக்கும் இனிமை! புகழ்த்தமிழைக் - காக்கும்
உணர்வெனும் தீபம் உளத்துள் ஒளிர்ந்திட்டால்
மணம்பெறும் வாழ்வு மலர்ந்து!
~O~O~O~

நின்று மனத்துள் நெகிழ்கிறதே இன்பத்தை
என்று தருமோ இயம்பு!
~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~

வலையுலகில் எனது அன்புக்குரிய தோழியான
 பிரியா அவர்களின் மழைச்சாரல்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.

மழைச்சாரல்

http://wordsofpriya.blogspot.com/

பிரியா தனது வலத்தள சுய விபரப்பதிவில் `எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிப்படுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....` என்று தன் எண்ணத்தைத் தன்னைப் பற்றி அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியா மிக அருமையான கற்பனைகளும் அதன் வெளிப்பாடான எழுத்து வல்லமையும் நிறைந்தவர்.
கவிதை, கதை, கட்டுரைகள் எனப் பலதரப்பட்ட விடயங்கள் பிரியாவின் வலைத்தளத்தில் பரந்து விரிந்து படைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

தோழியின் படைப்புகள் ஏராளம் இருந்தும் அண்மையில் அவரின் கவிதைப் படைப்பான தேநீரின் கதை என் மனதை மிகவும் நெருடியது!

எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் அன்பானவர்.

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே பிரியாவின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

இவரின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ஆயினும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்!..

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
~0~0~0~


அனைவருக்கும் தித்திக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.

_()_

Oct 23, 2013

ஒளி காட்டும் வழி!..

 கோட்டுச் சித்திரத்தில் என் மனதைக் கவர்ந்த 
மழலை இங்கு
 எனது க்விலிங் கைவேலையில்!...:)
≈≈≈≈≈

ஒளி காட்டும் வழி!.
 


இருளில் இருந்தால் இடர்மிகுந் தோங்கும்!
அருளிலா வாழ்வு  துயர்மிகுந் தேங்கும்!
பொருளைத் தேடினால் புலருமோ வாழ்வு!
மருளை நீக்கிட மதியொளி ஏற்றுவீர்!

உணர்வதோ தருவதோ ஒன்றுமே இல்லாது
திணறுவரோ போராடித் தினமும் சிதைந்து!
மலர்கின்ற யாவும் மணம் கொண்டதில்லை!
புலர்கின்ற கதிராய்ப் புறப்பட்டுச் செல்வீர்!

எண்ணிட வேண்டும் இல்லாமை உளதென்று
நண்ணிட நல்குவீர் நல்லுதவி இன்றே!
கல்வி ஒளியே கண்ணெனக் கருதியே
சொல்லித் தருவீர் சுடர்ந்திட வாழ்வே!

அடக்குமுறை அதிகாரம் ஆணவம் எம்மை
மடக்கியே மந்தையாய் மகிழ்வதைக் கடக்க
திடங்கொண்டு எழுவீர்! தீயவரை அழிப்பீர்!
இடங்கண்டு சேருவீர்! இன்னல் தீரவே!

அன்பொளி ஏற்றுக! அருளொளி ஏற்றுக!
பண்பொளி ஏற்றுக! பண்ணொளி ஏற்றுக!
இன்பவொளி ஏற்றுக! இதயத்துள் மின்ன!
துன்பகன்று ஓடும்! துணிவொளி யாலே!

தங்கத் தமிழொளி! எங்கள் உயிரொளி!
பொங்கும் மறவரால் பொலியும் புகழொளி!
நம்மின் தலைவன் நல்கிய பேரொளி!
எம்மினம் நிமிர இயம்பிடும் நல்வழியே!.

  

இக் கவிதையினை அன்புச் சகோதரர் ரூபனின் தீபாவளிக் கவிதைப் போட்டிக்கு அனுப்புகிறேன்.

போட்டியில் பங்குகொள்ளும் அளவிற்கு எனக்கு ஆற்றல் இல்லை...
ஆயினும் ரூபனின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கமுடன் இதனை அவருக்கு அனுப்பி வைக்கின்றேன்!.
≈≈≈≈≈


நல்லவர்  நட்பைத் தேடி
நலம்பல பெறுவோம் நன்றே!
வல்லவர் அன்பை வேண்டி
வளம்பல காண்போம் இன்றே!
~~~~~~~~~உள்ளூறும் உன்னுணர்வு உறங்கிப் போமோ
உயிரூறும் என்னில் உறைந்து!..
 *********


பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~


வலையுலகில் எனது அன்புக்குரிய சகோதரராகிய
 அ. பாண்டியன் அவர்களின் அரும்புகள் மலரட்டும்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில்
மிக்க மகிழ்வடைகிறேன்.
அரும்புகள் மலரட்டும்

http://pandianpandi.blogspot.com/

`வாழ்க்கைப் பயணத்தை ரசித்துக் கொண்டு நடக்கும் சாதாரண வழிபோக்கன் நான்` எனத் தன்னை அறிமுகப்படுத்தியிருக்கும் சகோதரர் பாண்டியன் தான் படித்த, அறிந்த, விடயங்களுடன் மொழி, கலை, கவிதை, இப்படிப் பலதரப்பட்ட விடயங்களையும் தனது வலைப்பூவில் பதிவாக்கி வருகிறார்.

சென்ற ஆகஸ்ட் மாதப் பதிவில் புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு  எனப் புதுக்கவிதை இயற்றலும் அதன் வடிவங்கள் பற்றியும் அருமையான விடயத்தைப் பதிவிட்டுள்ளார். புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் பயன் பெறக்கூடிய நல்ல பதிவு.

எழுத்துத் துறையில் நல்ல ஆர்வமுடன் தனது பதிவுகளோடு சக பதிவர்கள் வலைத் தளங்களுக்கும் சென்று சிறந்த நல்ல கருத்துகளைப் பகிர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் அன்பானவர் சகோதரர் பாண்டியன்!…

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே அவர் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

பாண்டியன் அவர்களின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். ஆயினும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இங்கு  இத்தரவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகின்றேன்!..

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
_()_
********************************************************************************

க்விலிங் - Quilling - ஓர் அறிமுகம்!.

கடந்த பதிவுகளில் எனது க்விலிங் வடிவங்களைப் பார்த்து
சில அன்புள்ளங்கள் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க
இங்கு அதனைப் பற்றி எனக்குத் தெரிந்ததைத் தொகுத்துத் தருகிறேன்!

தவறுகள் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்!
********************************

வர்ணத் தாள் நாடாக்களினால் செய்யப்படும் ஓர் அழகிய கைப்பணியாகும்!.

மேலே படத்தில் நான் உபயோகப்படுத்தும் வர்ணத்தாள் நாடாக்கள், பசை, கத்தரிக்கோல், இரண்டு வகையான இடுக்கிகள், மூன்று வகையான க்விலிங் கருவிகள் ஆகியனவற்றைப் படமாக்கித் தந்துள்ளேன்.

இதற்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள்:

*3 மில்லிமீட்டர் அளவு பருமனில் நேர்த்தியாக வெட்டப் பட்ட பல வர்ணத்தாள் நாடாக்கள்.
நீளம் நீங்கள் செய்யும் வடிவங்களுக்கு ஏற்றவகையில் மாறுபடும்.

*தாளை உருட்ட- roll செய்ய – அதற்குரிய கருவி.
மிக மெல்லிய முனை கூராக அல்லாத தட்டையாக நடுவே ஒரு வெட்டு இடப்பட்டிருக்கும் உலோகத்தினால் ஆனது.

இதில் தாளின் முனைப் பகுதியை செருகி மெதுவாகத் தாள் நாடாவினை ஒரு கை விரலால் பிடித்து மறு கையால் அக்கருவியை உருட்ட தாள் நாடா அதில் உருண்டுகொள்ளும். பின்னர் மெதுவாக கருவியிலிருந்து சுருளை உருவி எடுத்து அதை இறுக்கமான சுருளாக வடிவமைத்தோ அல்லது சற்றுத் தளரவிட்ட சுருளில் வடிவங்களை அமைக்கவோ பயன்படுத்தலாம்…

*ஒட்டுவதற்குப் பசை: அதிக நீர்ப்பதமாயில்லாமலும் களி நிலையில் இல்லாததுமான இறுக்கமான பசை.

*வெட்டுவதற்கு முனை மிகக் கூரான கத்திரிக்கோல்

*இடுக்கி – Tweezers - நேரானது, மூக்கு வளைவானது.
சுருட்டிய சுருளை கையாள்வதற்கு உதவுவது இது.

இவையே அடிப்படித் தேவையானவை.

தாள் நாடாவைச் சுருட்ட பற்குத்தும் குச்சியை கூரான பாகத்தை அகற்றி எடுத்து அதன் நடுவே கத்தியால் சிறிதாக ஒரு வெட்டு வெட்டி அதில் தாள் முனையை செருகி உருட்டலாம்.
நான் இதற்கு பழைய போல்ட்பொயின்ற் - Bold point pen - பேனையின் கோதில் இக்குச்சியை செருகி வைத்து அதனாலும் செய்ததுண்டு.

ஆரம்பத்தில் கை பழகுவதற்கு அதிக பணம் செலவு செய்யாமல் இவற்றினாலே கைவசம் இருக்கும் தாளினை சீராக வெட்டிச் சுருட்டி ஒட்டிப் பல வடிவங்களைப் பயிலலாம்.


இங்கு சில இணையத்தள இணைப்புகள் தந்துள்ளேன்..
இவற்றில் எப்படி க்விலிங் செய்வது என்று விளக்கமாக உள்ளது.

மேலும் கூகிளில் Quilling என்று தேடினாலே பலபேரின் செயல்முறைப் பயிற்சிகள் இருக்கின்றன. நீங்களும் பார்த்துச் செய்து மகிழுங்கள்!.
ஏதாயினும் உதவி தேவைப்படின் இங்கு கேளுங்கள். 
உதவக் காத்திருக்கின்றேன்!
நன்றி!.


http://increations.blogspot.de/2008/07/quilling-basics.html 

http://www.littlecircles.net/quilling-shapes-tutorial 

http://www.youtube.com/watch?v=r1nI3CsZbCA

http://www.youtube.com/watch?v=Divi6a8z000 

Oct 15, 2013

வேண்டுகிறேன்!..


கூகிலில் கிடைத்த படம் ஒன்றிற்கு
க்விலிங்க் கைவேலையில் முயன்றேன்...:)
~~~~~~~~~~~~

வேண்டுகிறேன்!..


பனித் துளியாய்ப் பூமியிலே பிறந்திடுவேனோ!..
பசுமையான புல் நுனியில் அமர்ந்திடுவேனோ!..
மனம் மகிழும் மாமலராய்ப் பிறந்திடுவேனோ!..
மாண்பு நிறை  மாதவனடி சேர்ந்திடுவேனோ!..

கருமைநிற முகிலென நான் பிறந்திடுவேனோ!..
களனியெலாம் பயிர் வளரப் பொழிந்திடுவேனோ!..
வயல்களிலே நெல் மணியாய்ப் பிறந்திடுவேனோ!..
வறுமைதனில் வாடும் வயிறு நிறைத்திடுவேனோ!..

வானமதில் வெண் நிலவாய்ப் பிறந்திடுவேனோ!..
வாழும் இருள் வீதியெங்கும் ஒளிதருவேனோ!..
செங்கதிரோன் சூரியனாயப் பிறந்திடுவேனோ!..
சூதுகொள்ளும் வஞ்சகரைச் சுட்டெரிப்பேனோ!..

சோலையிலே சின்னச் சிட்டாய்ப் பிறந்திடுவேனோ!..
சோகமில்லாச் சுகந்த ராகம் மீட்டிடுவேனோ!..
தாயகத்தில் மீண்டும் அங்கே பிறந்திடுவேனோ!..
தமிழன்னை காக்க உயிர் தந்திடுவேனோ!!..
~~~~~~~~~~~


அன்பில் தோன்றுதே அமைதி!
அறிவில் தெரியுதே திறமை!
நட்பில் பிறக்குதே உறுதி!
நலத்தில் மலருதே மகிழ்ச்சி!.
********


காற்றாய்க் கலந்திடக் கற்பனை உன்னோடு
ஊற்றாய்ச் சுரக்கும் உணர்வு!
*******


பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~


 வலையுலகில் எனது அன்புக்குரிய சகோதரராகிய
 ரூபன் அவர்களின் ரூபனின் எழுத்துப் படைப்புக்கள்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.

  ரூபனின் எழுத்துப் படைப்புக்கள்

  http://2008rupan.wordpress.com/

சகோதரர் ரூபன் அவர்கள் ஈழமணித் திருநாட்டினைத் தாயகமாகவும் மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர். தமிழ்மொழிப் பற்று மிக்கவர்.

  இவர் தனது வலைப்பூவில் கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதிப் பதிவிட்டுவருகிறார். 

தீபாவளித் திருநாளையொட்டி அண்மையில் தனது வலைத்தளத்தில் கவிதைப் போட்டி ஒன்றையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தனது வலைப்பூவினில் பதிவிடுவதுடன் சக பதிவர்களிடமும் சென்று கருத்துரையிட்டு அவர்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் நிற்கும் ஒருவர்!.
அன்புமிக்கவராய் அனைவர் மனதிலும் நிறைந்தவர் ரூபன்!…

 இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே அவர் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

ரூபனின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இருந்தும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை இங்கு மகிழ்வுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்!...
மிக்க நன்றி அன்பு உறவுகளே!
__()__

Oct 6, 2013

வர்ண ஜாலம்!..

வானவில்லின் வர்ணத்தினையும் 
வானம் காட்டும் கோலத்தினையும் கற்பனையாக
க்விலிங்க் கைவேலையில் சிறு முயற்சி! 

சாதாரணப் பூக்கள், வடிவங்கள் செய்வதைவிட 
இது பார்வைக்கு மிக இலகுவானதாகத் தோன்றினாலும் 
செய்யும்போது அப்படியல்ல என உணர்ந்தேன்.
வானவில்லின் நிறங்கள் யாவற்றையும் சேர்த்து என் மனக்கணிப்பின்படி வளைத்து நிறுத்துவதிலிருந்து மேகக்கூட்டத்தை வானவில்லுடன்
இணைப்பதுங்கூடச் சிரமத்தைத் தந்தது..
அழகோ இல்லையோ உங்கள் கண்களுக்கும்
காட்சியாய் இங்கே... :)
********

வர்ண ஜாலம்!.
~~~~~~~~

நிறங்கள் எத்தனை வானவில்லே!
தரங்கள் தானுமுண்டோ கூறுவில்லே!
கரங்கள் கொட்டுதுதான் களித்துநன்றே!
சுரங்கள் மாறிடுதே சூழலிங்கே!...

வரமோ சாபமோ வாழ்வுமிங்கே!
திரமே இல்லையேநம் தீவிலங்கே!
உரமோ உறவோ உணர்வுமங்கே!
பரமனும் படைத்தான் வாழுஎன்றே!

உனக்குள்ளே காட்டிடும் வர்ணஜாலம்!
உலகினிலும் இருக்கிறதே உணரவேண்டும்!
உவகையோடு மானிடரும் உன்போல்தானோ!
உறுதியேதும் இல்லாமல் மாறுகின்றாரே!.
******

 

பாலம் இது!..
மழைக்கும் வெயிலுக்கும் மகத்தான பாலமிது!
அழைக்கும் எங்களின் ஆசையைப் பெருக்குவது!
தழைக்கும் என்ணங்கள் தாவியே பாய்கிறது!
விளைக்கும் வேட்கைமிக வேண்டுமே வேலியது!..
********

 
தாரகை..
உன்னை நினைக்கையில் ஒருதாரகை அங்கே
மின்னிடும் வானில் முளைத்திட வேண்டினேன்!
என்னவனே! எண்ணிப்பார் சிமிட்டும் வெள்ளிகளை!
எத்தனை தடவை எண்ணுகிறேன் உனையென்று!..
~~~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~
 


வலையுலகில் எனது அன்புக்குரிய நண்பியாகிய
 ஸ்ரவாணி அவர்களின் தமிழ்க் கவிதைகள் தங்கச் சுரங்கம்
என்னும் வலைப்பூவினை இம்முறை
பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.

 தமிழ்க் கவிதைகள் தங்கச் சுரங்கம்

 http://sravanitamilkavithaigal.blogspot.de/

தோழி ஸ்ரவாணி பல்கலைத் திறமையாளர். இவர் தனது வலைப்பூவில் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுத்திருந்தாலும் பொது விடயங்களுக்கும், கட்டுரை, கதை, ஆரோக்கியம், அழகுக்கலை இவைகளுக்கும் இடம் ஒதுக்கியுள்ளார்.

இவர் நல்ல கலாரசிகர். இவரின் கவிதைப் படைப்புகளே இவர் எந்தளவில் ரசனைமிக்கவரெனப் பறைசாற்றும்.

எண்ணிலடங்கா விடயங்கள் இவர் வலைப்பூவில் கொட்டிக்கிடக்கின்றன. நானும் சமீப காலமாகவேதான் அவர் வலைப்பூவிற்கும் சென்று பார்த்துப் படித்து ரசித்து வருகின்றேன்.

ஸ்ரவாணியின் வலைப்பூவில் அவரின் அறிமுகப் பகுதியைப் பார்த்தாலே அவரைப் பற்றி அவர் சொல்லுகின்றவைகள் பற்றித் தெரிந்திடும்.
மேலும் இவரின் வலைப்பூவில் லேபில்கள் பகுதியில் ஹைக்கூ கவிதைகள், கலண்டர் கவிதைகள் என இவற்றுடன் யுவதி பக்கங்கள் என்னும் பகுதிக்குள் நுளைந்து பார்க்கும்போது என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார் எமது தோழி ஸ்ரவாணி அவர்கள்!

இவரின் வலைப்பூவினைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்வதைவிட நீங்களே அவர் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

ஸ்ரவாணியின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இருந்தும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளத்திற்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை இங்கு மகிழ்வுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்!...

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
__()__