Pages

Sep 27, 2013

சிரிக்கும் பூவே!..

வின்டேஜ் படத்தில் செய்த க்விலிங்!.

நேற்றுத் தனது முதலாவது பிறந்த நாளைக் கண்ட
என் உறவினரின் மகளிற்காகச் செய்த 
க்விலிங் வாழ்த்து மடல் இது!
~~~~~~~~~~

 சிரிக்கும் பூவே!
 ☼☼☼☼☼☼☼

சிரிக்கும் பூவே! சின்னச் சிட்டே!
தரிக்கும் மணியே! தழைக்கும் தமிழே!
விரிக்கும் விழியில் வியக்கும் அழகே!
உரைக்கும் சொல்லை உள்ளம் பதிப்பாய்!

அன்பாய் அனைத்தும் ஆண்டிட வேண்டும்!
அறிவாய் எதையும் அளந்திட வேண்டும் !
பண்பாய்ப் பணிவாய்ப் பழகிட வேண்டும்!
பாங்குடன் செயல்களைப் படைத்திட வேண்டும்!

இன்தமிழ் மொழியைக் கற்றிட வேண்டும்!
இனிமையாய் இயல்பாய் இருந்திட வேண்டும்!
எம்உயிர் நாட்டினை இறைஞ்சிட வேண்டும்!
என்றும் உணர்வுடன் இயங்கிட வேண்டும்!.
 ********சிந்தை வயலில் தெளிவு விதையாக
விந்தை விளையும் விரைந்து!
********


பதிவோடு பகிரும் பதிவர்
~~~~~~~~

வலையுலகில் எனது அன்புக்குரிய இன்னுமொரு நண்பியாகிய
 மகி அவர்களின் Mahi's Space என்னும் வலைப்பூவினை இம்முறை பதிவோடு பகிரும் பதிவராக உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மிக்க மகிழ்வடைகிறேன்.


http://mahikitchen.blogspot.de/ 

 மகி சமையற்கலையில் வல்லுநர். தானறிந்த சமையற் குறிப்புகளையும் சுய முயற்சியாக மிகுந்த ரசனையுடன் செய்து பார்க்கும் புதுவிதமான சமையற் குறிப்புகளையும் எம்முடன் ஆர்வமுடன் பகிர்ந்து வருகிறார்.

சமையல் மட்டுமல்லாது கைவேலைகள், வீட்டுத்தோட்டம், வெளியே மனதிற்கு மிக மகிழ்ச்சியைத்தரும் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்தல் போன்ற பல விடயங்களில் மிகவும் சாமர்த்தியசாலி. அவற்றை அவ்வப்போது எம்முடன் தனது வலையில் பகிர்ந்தும் வருகிறார்.

வீட்டுத் தோட்டத்திற்கென்று அவர் நேரம் ஒதுக்கிச் செய்யும் முயற்சிகளை அவரின் வலைப்பூவில் தோட்டம் என்னும் பகுதியில் பாருங்கள்.. வியந்து போவீர்கள்!..
உண்மையாகவே உள்ளங்கை இடத்திலும் தனது அயரா முயற்சியால் கிடைக்கும் அறுவடையை நம்முடன் அத்தனை மகிழ்ச்சியாக அங்கு பகிர்ந்துகொள்கின்றார்!

அனைத்தையும் மகி எம்முடன் பகிர்ந்துகொள்ளும் விதமே அலாதியானது. அத்தனை நகைச்சுவை உணர்வோடு படிப்பவர்களை கவரும் விதமாக எழுதுவதிலும் மிகவும் திறமையானவர்….:)

இவர் இதே பெயரில் ஆங்கில மொழியிலும் சமையற்கலை வலைப்பூவினை வைத்திருக்கின்றார்.

இவரைப் பற்றி நான் சொல்வதைவிட நீங்களே மகியின் வலைத்தளங்களைப் பார்த்தால் மேலும் அறிந்துகொள்வீர்கள்!

மகியின் வலைப்பூக்களைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள்.  இருந்தும் இதுவரை அறியாதோர் இருப்பின் அவரின் தளங்களுக்கும் சென்று அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை இங்கு மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கின்றேன்!...

மிக்க நன்றி அன்பு உறவுகளே!
__()__

Sep 6, 2013

இன்னும் என்ன!...

 இது பல மாதங்களுக்கு முன்னர் செய்த 
க்விலிங் கைவேலையில் ஒன்று...
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

இன்னும் என்ன...
~~~~~~~~
 

நாட்டை இழந்தோம் நறுந்தேனாம்
நம்மொழி இழந்தோம்! இனமிழந்தோம்!
ஏட்டில் எழுத முடிந்திடுமோ?
ஏதிலியாய் அலைகின்றோம்!

கூட்டைக் கலைத்துக் குதறிடவே
கூறவிலாத் துயரங்கள் மிகச்சுமந்தோம்!
கேட்டு வலிஅகற்ற எங்களின்
கேவல்களை உணர்பவர் யார்?

பெற்றாரை இழந்தோம்! பெருமைதரு
பேறெல்லாம் நாம் இழந்தோம்!
உற்றாரை இழந்தோம்! உயிராகக்
கற்றவை யாவையும் சேர்த்திழந்தோம்!

பண்பாடு பழக்கங்கள் பலஇழந்தோம்!
கொண்டாடும் கலைகள் கூடஇழந்தோம்!
கண்மூடிடத்தாங்கும் தோழமை இழந்தோம்!
மண்ணிழந்தோம் எம்மகிழ்வும் இழந்தோமே!..
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

~~~~~~~~

பதிவோடு பகிரும் பதிவர்இந்திரலோகமல்ல இது இமாவின் உலகம்!
சிந்தைக்கு நிறைவாக சீர்தரும் ஓருலகம்
வந்திடும் உறவினை வசப்படுத்தும் தனியுலகம்
தந்திரமில்லாத் தனியுலகமது இமாவின் உலகம்!..

என் ஆரம்பகால அன்புத் தோழிகளில் ஒருவரான இமா அவர்களின் இது இமாவின் உலகம் என்னும் வலைப்பூவினை இங்கு உங்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கின்றேன்!இமா, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். நாங்கள் எப்பவும் அவரை ரீச்சர் என்றே செல்லமாக அழைப்பது வழக்கம்!...:).

இமாவின் உலகத்தில்  இல்லாத விடயங்களே இல்லை எனலாம். கதை, கவிதை, கைவேலை, சமையல், ஓவியம், வீட்டுத்தோட்டம், ஒப்பனை, அலங்காரம் இன்னும் இன்னும்...எவ்வளவோ.. அங்கு இருக்கின்றன!
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் ஜீவகாருண்ணியம் என்றால் உதாரணம் இமா தான். தன் வீட்டுத்தோட்டத்திற்கு வரும் அத்தனை செல்லப் பிராணிகளிடமும் சொல்ல முடியாத பாசத்தினைப் பொழிந்திடுவார். அவைகளுடன் தனக்குக் கிடைக்கின்ற நேரம் முழுவதையுமே செலவிடுவார்.

இயற்கையை விதவிதமாகப் படங்கள் எடுப்பதும் பகிர்வதும் அவரின் இன்னொரு சிறப்பு ஆகும்!

இமாவின் வலைப்பூவினைத் தெரியாதோர் இருக்கமாட்டார்கள். இருந்தும் இதுவரை அறியாதோராயின் அவர் வலைக்கும் சென்று அவரை ஊக்குவிக்கலாமென இங்கு இவற்றை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கின்றேன்!...
மிக்க நன்றி அன்புறவுகளே!
__()__