Pages

Jul 28, 2013

என்னுயிர்த் தமிழே!..


பழைய காலப் படமான வின்ரேஜ் (Vintage)
எனக்கூறப்படும் தொகுப்பிலுள்ள இப்படத்தினைக் கூகிளில் எடுத்து
என் கற்பனை, ரசனைக்கு ஏற்றவகையில்
‘என்னுயிர்த் தமிழே’ என
க்விலிங் கைவேலையினைச் சேர்த்துச் செய்துள்ளேன்.
உங்களுடன் இதனைப் பகிர்வதில் மகிழும் தருணம் இதைப்பற்றிய
உங்கள் கருத்தினையும் அறிய ஆவலாயுள்ளேன்..
மிக்க நன்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

குறள் வெண்பா


கரையிலாக் காதல் கவியதிற் கண்டே
வரைந்திட வைத்த தமிழ்!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

என்னுயிர்த் தமிழே!.
அறுசீா் விருத்தம்
[விளம் - மா - தேமா]

என்னுயிர்  காக்கும் செல்வம்
ஈடிலா மொழியே! வாழ்வே!
பொன்னதில் உயர்வே காணும்
புதையலே! புகழே! பேறே!
விந்தையே! வனப்பே! இன்பம்
தந்திடும் சுவையே! என்றன்
சிந்தையில் நிறைந்த சீரே!
செந்தமிழ்த் தாயே! போற்றி!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

புது மணம்..
அறுசீா் விருத்தம்
[விளம் - விளம் - விளம்]

 பூவிது பெற்றிடும் புதுமணம்!
புன்னகை பூக்குதே அனுதினம்!
தாவிடும் மனமிது கணம்கணம்!
தவிப்பொடும் ஆசையைப் பெருக்கிடும்!
கூறிட முடியுமோ அனுபவம்!
கொள்வதும் உணர்வதும் ஆயிரம்!
ஆருயிர்த் தோழியாம் அருந்தமிழ்
அடியினைச் சேரும்நாள் எண்ணிடும்! 
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

மனதின் பாட்டு
அறுசீர் விருத்தம்
[விளம் - மா - தேமா]

மாதிவள் மனதின் பாட்டு
மயங்கிட நாளும் கேட்டு
காதிலே நிற்கும் மெட்டு
கரைந்திடும் கண்ணீர் விட்டு
தூதினைத் தேடும் உள்ளம்
துடித்திடும் இதயம் சொல்லும்
ஏதிவள் செய்வாள் இங்கே
ஏங்கிடும் மனந்தான் சாகும்!
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

பதிவோடு பகிரும் பதிவர்


இந்த முறை என் பதிவோடு பகிரும் பதிவராக என் தோழியும் க்விலிங் கைப்பணி (மானசீக ஆசிரியையும்) வல்லுநருமாகிய வலைப்பூப் பதிவர் அஞ்சு என்று நாம் செல்லமாக அழைக்கும் ஏஞ்சலின் அவர்களின்


எனும் வலைப்பூவினை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றேன்!

அஞ்சு க்விலிங் மற்றும் ஏனைய கைப்பணிகளுக்கென
என்னும் ஆங்கில வலைப்பூவினையும் வைத்திருக்கின்றார்.

தோழி தமது வலைப்பூவில் பலவிதமான கைப்பணிகள், சமையல், இன்னும் முகப்புத்தகத்திலுள்ள பசுமை விடியல் பற்றிய பதிவுகள் என நிறைய விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். முகப்புத்தகத்தில் பசுமை விடியல் பகுதியில் ஒரு பிரதான பதிவாளராகவும் திகழ்கின்றார்.

அத்துடன் இவர் தனது வலைப்பூவில் தான் கண்ணுற்ற கேள்விப்பட்ட மனதிற்குப் பிடித்த சமையல் விடயங்களை உடனுக்குடன் செய்து பார்த்து அழகான படங்களுடன் பதிவிட்டு அசத்தும் திறமைசாலி.

எவராயினும் எப்பொழுது என்ன கேட்டாலும் சலிக்காமல் பதில் தருவதும், உதவுவதும் அஞ்சுவின்  உயர்ந்த பண்பாகும்.

ஆரம்பத்தில் ஆர்வத்தினால் இணையத் தளங்கள் மூலம் இந்தக் க்விலிங் கைப்பணியை நானும் தேடிக் கண்டுணர்ந்து செய்துவந்தபோதிலும் சில நுட்பமான விடயங்களை எனக்கு அஞ்சுவே தானே அவற்றைச் செய்து படங்களாக எடுத்தும் அது தொடர்பான சில வலைத்தளத் தொடர்புகளைத் தேடித் தொகுத்தும் தந்து ஊக்குவித்துள்ளார்.
அவரின் உதவி, ஊக்கமில்லாது போயிருந்தால் நானும் இவ்வளவுக்கேனும் இக்கலையைக் கற்றிருக்க முடியாது.  அவ்வகையில் என் அன்புத் தோழிக்கு இதயங்கனிந்த நன்றிகளை இங்குக் கூறிக்கொள்கிறேன்.

நீங்களும் அஞ்சுவின் வலைப்பூக்களுக்கும் சென்று பார்த்து அவரையும்  ஊக்குவிக்கலாமென இவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மிக்க நன்றி அன்புறவுகளே!
__()__