Pages

Jun 27, 2013

நிழலாக நினைவுகளாக...


க்விலிங் கைவேலையில் சென்ற வருடம் இதே நாளில் ஒரு நண்பிக்குச் செய்த வாழ்த்துமடல். இதுவும் (அந்த நண்பியும்) இப்பொழுது என் நினைவுகளில் மட்டும்... 
~~~~~~~~~


நிழலாக நினைவுகளாக!...

               கண்மூடிக் காணுகின்றேன் கனவல்ல மனஓவியங்கள்
               விண்காண வளர்ந்திடுதே விரட்டியெனை மிரட்டிடுதே
               பண்பாடித் தமிழ்வளர்த்து பலகதைகள் நான்பயின்ற
               மண்வாடி நிற்கிறதே மனதை துயர்வருத்திடவே...

               சின்னவளாய் நானும் சிரித்திருந்த காலமதில்
               இன்னுயிர்த் தோழர்களாய் இருந்திட்ட எத்தனையோ
               மின்மினிப் பூச்சிகள் மின்னலாய் மறைந்தனரே
               என்னசொல்லி ஏதுபயன் இழந்தவைகள் மீண்டிடுமோ...

               தேசம்விட்டு நாமும் தெருவெல்லாம் திரிந்தலைந்து
               பாசமுடன் இருந்த பலரையும் தொலைத்துவிட்டோம்
               வேசமுடன் இங்கே வெளிநாட்டு வாழ்க்கையும்தான்
               நேசமில்லை நெருக்கமில்லை நிம்மதி சற்றுமில்லை...

               வானகமோ வையகமோ வாழ்க்கை நீர்க்குமிழிதானே
               கானகத்து வாழ்வாகக் கலங்கித்தான் வாழுகின்றோம்
               தேனகமாம் அருமைத் தென்னக உறவுகள்தானெங்கள்
               ஊனகமும் உயிருங்காத்து நிழலாக நம்நினைவுகளாக!...
ⱷⱷⱷⱷⱷⱷⱷⱷ


பாரம்...
~~~
குடையும் பாரம்
மழை இல்லையென்றால்

பட்டமும் பாரம்
வேலையில்லை என்றால்

அழகும் பாரம்
ரசனை இல்லை என்றால்

வாழ்க்கையும் பாரம்
சுவையே இல்லை என்றால்... 
♦♦♦♦♦♦♦♦

ѳѳѳѳѳ


பதிவோடு பகிரும் பதிவர்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ


பதிவோடு ஒரு அறிமுகம் என்றிருந்த இப்பகுதியை அறிமுகம் என்பதை விடுத்து - அநேகமான பதிவர்கள் பலருக்கும் அறிமுகமானவர்கள் என்பதனால் - பதிவோடு சக பதிவரை, அவரின் வலைப்பூவினை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளவதை ”பதிவோடு பகிரும் பதிவர்” என மாற்றியுள்ளேன்.

இங்கு பதிவோடு பகிரும் பதிவராக 
வலைப்பூப் பதிவாளர் கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களின்
 கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் எனும் வலைப்பூவினை  உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.


bharathidasanfrance.blogspot.de

கவிஞர் ஐயா அவர்கள் தனது வலைப்பூவில் கவிதை, கட்டுரை, விழாப்புகைப்படங்கள் என  பல விடயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஐயா நிறைந்த இனவுணா்வினையும் தமிழ்ப் பற்றினையும் உடையவர். தமிழே அவரின் உயிர் மூச்சு!

பிரான்சுக் கம்பன் கழகத்தின் தலைவராகவும், கம்பன் இலக்கிய இலக்கணத் திங்களிதழின் நிறுவுநராகவும் தொண்டாற்றுகிறார்.  
பிரான்சில் யாப்பிலக்கண வகுப்புக்களை நடத்தி 
பல கவிஞா்களை உருவாக்கியுள்ளார்.

ஐயா அவர்கள் கம்பன் விழா, பொங்கல் விழா ஆகிய விழாக்களை ஆண்டுதோறும் நிகழ்த்தித் தமிழரின் பண்பாட்டினை, கலாச்சாரத்தினை அனைவர்க்கும் பறைசாற்றுகிறார்.

தனது வலைப்பூவில் ஏராளமான கவிதைகளை மிகமிக எளிய இனிய நடையில் நாமெல்லாம் விளங்கிக் கொள்ளும் வண்ணம் தினமும் பதிவேற்றி வருகிறார்.

ஐயாவின் படைப்புகளை நான் இங்கு சொல்வதைவிட நீங்களே அவரின் வலைப்பூவினில் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.
கவிதை எழுதுவதில் அவருக்கு நிகர் அவரேதான்!.

அவரின் தந்நலமற்ற மொழிப்பற்றும் இனப்பற்றும் சொல்லுக்குள் அடங்காதவை.

நானும் எழுதுபவற்றில்விடும் சில தவறுகளை அவ்வப்போது சுட்டிக் காட்டியுமுள்ளார்.

நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என என்னை நீங்கள் பாரட்டுவதற்கு  நானும் ஐயாவிடம் ஏதோ கொஞ்சம் அவ்வப்போது கேட்டு மொழியைச் சிறிதளவு என் மூளையில் பதித்து  
அதன்படி எழுதுவதால்தான்.
இருந்தும் அவரிடம் மொழியையும், கவி புனைவதையும் முறைப்படி கற்க எனக்கும் மிகுந்த ஆவல். ஆகையினால்...

 ஐயா! ஒரு விண்ணப்பம்!....

உலகம் முழுவதும் பரந்து வாழும் என் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு இணையவழியாக இவற்றை உங்களிடம் கற்க ஆவன செய்யுமாறு பணிவன்புடன் இவ்விடத்தில் கோரிக்கையாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

கவிஞர் ஐயாவின் வலைப்பூவினைத் தெரியாதவர்கள் இருப்பின் இப்படியாகினும் தெரிந்துகொள்வதுடன் நல்ல அற்புதக் கவிஞரை ஊக்குவித்து தமிழை, தமிழறிவை மென்மேலும் வளர்த்திடலாமென இங்கிவற்றை உங்களுக்கு அன்புடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

மிக்க நன்றி அன்புறவுகளே!.
_()_


பிந்திய முக்கிய செய்திப் பகிர்வு!...

கவிஞர் கி. பாரதிதாசன் ஐயா அவர்கள் எமது விண்ணப்பதினை ஏற்று கருத்துப் பகிர்வினில் இவ்வாறு கூறியுள்ளார்...
28 June, 2013 01:53
வணக்கம்!

தங்களின் அன்பு விண்ணப்பம் ஏற்கப்படுகிறது!

வருகின்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து கவிதை எழுதும் மரபு இலக்கணத்தை என் வலையில் எழுதுகிறேன்!

கவிதைக் கலையைக் கற்க விரும்புவோர் தொடா்புகொள்ளவும். kambane2007@yahoo.fr

Jun 19, 2013

இயற்கை தரும் இனிமை!...க்விலிங் கைவேலையில் செய்த மிக இலகுவான 
ஒரு சிறிய வாழ்த்து மடல்.
∞∞∞∞∞∞

mother natureஇயற்கை தரும் இனிமை...
~~~~~~~~~~~~~~~~~~~

நிலம்!
¤¤¤¤¤¤
                                           பொறுமைக்கு மண்ணாம் நல்ல
                                           பெருமைக்கும் பேற்றுக்கும் 
                                           நற்கருணைக்கும் நல்அன்னையாம்
                                           நிதமெமை தாங்கும் பொறையாம் 
                                           வறுமை நீக்கும் தரையாம்
                                           வாழவைக்கும் நல் வரமாம்
                                           தரிசாய்க் கிடக்கும் தங்கமாம்
                                           பரிசாக எமக்குப் பலமான நிலமே!.

நீர்
¤¤¤
                                           கருமேகம் மிகக் குளிர்ந்தே
                                           மழையெனப் பொழிகையிலும்
                                           சிறு துமியாய் அதுசிதறி
                                           சில்லென உடல் நனைக்கையிலும்
                                           மலைதழுவி அருவி ஆறு நதியெனஆகி
                                           மண்தவழ்ந்தும் கடல் கலந்தே
                                           உடல்சோரா நலன்காக்கும் நீரானாய்
                                           உளமுவக்கும் பேறானாய் தண்ணீரே!.

நெருப்பு
¤¤¤¤¤¤
                                           தீயதை அழிக்கும் தீயென்றால்
                                           போய்விடுமே யாவும்
                                           காய்வதும் எரிவதும் தீய்ந்துபின்
                                           சாம்பலாகி மீள்வதும் இவ்வுலகில்
                                           நோயினைத் தடுக்குமே காவலென
                                           நெருப்பாகநில் என்றால்  வீரமாகி
                                           விருப்பாகி வெளிச்சமாகி சத்தியத்தின்
                                           சாட்சியான கடவுளே காக்கும் கனலே!.

காற்று
¤¤¤¤¤¤
                                           பூஞ்சோலை மலர்தழுவி
                                           பொதிகைமலை வனம்மேவி
                                           நீர்நிலைகள் குளம் தவழ்ந்து
                                           நிம்மதியாம் இறைசந்நதி புகுந்து
                                           தீராஇனிமை இளமையுடன் எமக்கு
                                           பாரில் உயிர்காக்கும் சுவாசமுமாய்
                                           யாவர்க்கும் சுகம் சேர்க்கும்
                                           தேவர்க்கு நிகரான தென்றலே!.

ஆகாயம்
¤¤¤¤¤¤
                                           சுட்டெரிக்கும் சூரியனும்
                                           பட்டொளி வெண்ணிலவும்
                                           கட்டுக்கடங்கா மின்மினிகளாம்
                                           நட்சத்திரங்களும் நீர்தரும்
                                           கார்மேகம் மென்முகில் இன்னும்
                                           வண்ணமாய் மிளிரும் வானவில்லும்
                                           வானூர்தி பறந்திட வனப்பான வழியும்
                                           சீர்பலதருதே வானமெனும் ஆகாயமே!.
♣♣♣♣♣♣♣♣♣♣பொல்லாத மனிதம்!..
~~~~~~~
நிராகரித்தாலும் நிழல்தந்து
வெட்டி எறிந்தாலும் விறகாகி
கல்லால் அடித்தாலும் கனிதருதே
பொல்லாத மனிதம் இதைப்புரிந்திடுமோ!..
~~~~
ѻѺѻѺѻѺѻ

பதிவோடு ஒரு அறிமுகம்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

வலைப்பூப் பதிவாளர் தோழி அம்முலு அவர்களின் பிரியசகி எனும் வலைப்பூவினை  இங்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

பிரியசகி     http://www.piriyasaki.blogspot.de/

பிரியசகி தனது வலைப்பூவில் பல சுவாரசியமான விடயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

எங்கள் சகபதிவாளர் தோழி அஞ்சலினிடம் நானும் பிரியசகியும் அதிராவும் க்விலிங் கைவேலையை அவ்வப்போது சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்திபண்ணி மேலும் கற்றுவருகிறோம். அவ்வகையில் பிரியசகியும் தான் செய்த சில க்விலிங் மடல்களையும் இன்னும் வேறு கைவேலை ஆக்கங்களையும் சமையல், வெளிப்புறக்காட்சி நிழற்படங்கள், மனதைக் கவர்ந்த பாடல்கள் என பல சுவாரசியமான பதிவுகளை பதிந்துவரும் ஒரு வளரும் வலைப்பூ பதிவர் ஆவார். 
கவிதை எழுதவும் ஆரம்பிப்பதாக அறிந்தேன். விரைவில் அவர் வலைப்பூவில் கவிதைகளையும் காணலாம் என எண்ணுகிறேன்...:).

(ஏனோ நீண்ட காலமாக பதிவேதும் ஏற்றாமல் இருக்கிறார். இப்பொழுதாவது... இனியாவது விரைந்து செயற்படுவாரென நம்புகிறேன்.)

தோழி பிரியசகியின் வலைப்பூவினை தெரிந்திருந்தோர் இருப்பினும் தெரியாதவர் யாரேனும் இருந்தால் அவர் வலைப்பூவினை தெரிந்துகொள்வதற்காகவும் அவரை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் இங்கு அவரின் வலைப்பூவினை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

தோழி பிரியசகியின் வலைப்பூவிற்கும் சென்று அவரையும் ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மிக்க நன்றி நட்புகளே!.
☼☼☼☼☼☼☼

Jun 4, 2013

மௌனம்...


க்விலிங் கைவேலையில் ஆரம்ப காலத்தில் 
 (15 நிமிடங்களில்) செய்த ஒரு 
அவசர வாழ்த்து மடல்!...
*****

Oriental Garden

மௌனம் வென்றதே... 
~~~~~~~~~

சொல்ல நினைத்ததெல்லாம்
மெல்ல பக்கம் வந்தும்
சொல்ல முடியவில்லையே
மனது சும்மா இருந்ததுள்ளேயே..

முல்லைப்பூவின் வாசம் காற்று
வந்து சென்ற போதும்
தள்ளித்தான் போய்விடுமோ
தேங்கி இருக்குமே பூவுக்குள்ளேயே..

நெருங்கி வந்த போதும்
உருகி எந்தன்  உள்ளம்
கரைந்ததே கண்களுடனே கலந்து
வார்தையும் வரவில்லையே..

இதழ்கள் திறந்தே சொல்ல
இதயம் இனித்தே துள்ள
மனதும் துடித்தது உடனே ஆனால்
மௌனம் விரைந்து வென்றதே...
ⱷⱷⱷⱷⱷⱷⱷⱷⱷ


மௌனமொழி...
~~~~~

அதட்டினால் அரண்டிடும்
அணைத்துப்பார்
அடிமையாகிவிடும்
பேசும் உன்னோடு
புரியும் அப்போது!...
~-~-~


********************

பதிவோடு ஒரு அறிமுகம்
ᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥᴥ

வலைப்பதிவாளர் தோழி கிரேஸ் அவர்களின் தேன் மதுரத் தமிழ் எனும் வலைப்பூவினை  இங்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்வுறுகின்றேன்.

தேன் மதுரத் தமிழ்!       http://thaenmaduratamil.blogspot.de/

கிரேஸ் அவர்களையும் அவரின் வலைப்பூவினையும் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். 
அவரே சில மாதங்களுக்குமுன் வலைச்சர ஆசிரியராக இருந்தவருமாவார்.  
இருப்பினும் தெரியாதவர் யாரேனும் இருந்தாலும் அவர் வலைப்பூவினை தெரிந்துகொள்வதற்காகவும் அவரை மேலும் ஊக்குவிக்குமுகமாகவும் இங்கு அவரின் வலைப்பூவினை அறிமுகம் செய்வதில் மகிழ்வுறுகிறேன்.

தோழி கிரேஸ் தனது வலைப்பூவில்  அழகான கவிதைகள் - கவிதை என்றால் கவிதையில் காட்சியைக் காட்டிவிடும் அதிதிறமைசாலி -, கதைகள், சங்க இலக்கியம், கட்டுரை இப்படி இன்னும் நிறைய அறிவுக்கு விருந்து படைக்கும் விடயங்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.

ஆர்வமுள்ளவர்கள் அவரின் வலைப்பூவிற்கும் சென்று தோழி கிரேஸ் அவர்களையும் ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மிக்க நன்றி உறவுகளே!...
~~~~~~~~~