Pages

Feb 24, 2013

உறவு

அன்பு தோழியே அதிரா! உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள்
 (22.02)
நல் வாழ்த்துக்கள்!!!
................
என்ன இப்படிக் காலந்தாழ்த்தி ஒரு வாழ்த்தென பார்க்கின்றீர்களோ...:) ஆமாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்றாகிவிட்டது. அதிராவின் பிறந்த தினத்திற்கு அன்றே பதிவேற்றம் செய்ய ஆயத்தப்படுத்திய பதிவு  நான் திடீரென எனது இருப்பிடத்தில் இல்லாது போனதால் தடங்கலாகிப் போய்விட்டது. மனம் மிக வருந்துகிறேன். காலதாமதமானாலும் தயாரித்த வாழ்த்தினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஏற்றுக்கொள்ளுங்கள்!!

அன்பு அதிரா! உங்கள் உறவினாலும் உதவியாலும்தான் நானும் இங்கு ஒரு வலைப்பூவினை எனதாக்கி விரும்பிய வண்ணம் பதிவேற்றி நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ்கின்றேன். உங்கள் அன்பும் ஆதரவும் உதவியும் இன்றி நான் இங்கு இல்லை. உங்களின் பிறந்த தினத்திற்காகச் செய்த க்விலிங் வாழ்த்து மடலினையும் ஒரு சிறு கவியையும் உங்களுக்கு என் அன்புப் பரிசாக்குகின்றேன். 
**************

உற்றதோழியடி....
..................

                          உன் முகம் காணாமலேயே
                          உன்னுடன் எனகிந்த நட்பு...
                          உன் அன்பும் பாசமும் பரிவும்
                          உனக்கு ஒரு முகத்தோற்றத்தை என்
                          உள்ளத்தில் வரைய வைத்ததே...
                          உதவியென்றால் மறுக்காமல் சலிக்காமல்
                          உடனடியாகவே உதவிடுவாய்
                          உள்ளபடி நடப்பதும் எதிலும்
                          உறுதியோடு இருப்பதுவும் எப்படியென
                          உனைப் பார்த்துப் பழகிக் கொண்டேன்
                          உணர்வுபூர்வமாக நகைச்சுவையோடு
                          உண்மையாக நட்புதனைப்பேணும்
                          உன்னதமான ஒரு உறவு நீதான்..
                          உயிர்த்தோழி உன் பிறந்தநாள் இன்று
                          உவகையோடு உன்னை வாழ்வாங்கு வாழ்கவென 
                          உளமார வாழ்த்துகிறேன்! வாழ்க நலம்சூழ!!!
~~~~~~~~~~~~~~~~~~~காக்கின்றேன் வா....
~~~~~~~~~~~
                             நீயும்நானும் நாளும் நிறைந்த நேசமொடு 
                             பூவும் மணமுமாய் பொருந்தியேயொன்றாகி
                             ஊனுமுயிருமெனக் கலந்து ஒன்றாய் இணைந்தே
                             தேனிலுமினிய வாழ்வு காண்போம் இன்றே வா... 

                             பொல்லாத கள்வா போக்கிரி உன்கோவம்
                             செல்லாது என்னிடம் சேர்வது இதுதிண்ணம்
                             கல்லாத காரிகையென் கருத்தினில் நீபுகுந்து
                             சொல்லாலணைக்கின்ற சுகமதை என்னவென்பேன்...

                             சின்னச்சின்னக் கதைபேசி செல்மாக இசைபாடி
                             மின்னுங்கண் ஜாடையினால் மெய்தழுவிப்போகிறாய்
                             இன்னுமிவ்வுயிர் உந்தனுக்காய் நான் காத்துப்
                             பின்னும் பாமாலையிதை பெற்றிட நீ வாராயோ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~என்னைக் கவர்ந்த பாடல் இங்கு அதிராவுக்குமாக.....


+++++++++++

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது...
++++++++++++++++++
குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

Feb 15, 2013

அன்பு வாழ்த்து!


பிறந்தநாள் வாழ்த்து 15.02
************************************
ஊரில் ஒரே வீதியில் பதினைந்து வீடுகள் இடைவெளியில் உள்ள வீடுகளில் வாழ்ந்து கொண்டு ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்த என் ஆருயிர்த்தோழி பூங்குழலிக்கு இன்று  15.02  பிறந்ததினம். உங்கள் அனைவருடனும் சேர்ந்து அவளை மனமார வாழ்த்துவதில் மகிழ்வுறுகிறேன்.

அன்புத்தோழி பூங்குழலி!... நீ எல்லா நலன்களும் பெற்று  நீடூழி காலம் நிறைந்த வாழ்வு வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.

நாம் பாடசாலை வாழ்க்கை முடிந்து  நான் வேறு துறையில் என் மேற் படிப்பை மேற்கொள்ள அவளும் தன் படிப்பைத் தொடர்ந்து வேலை கிடைத்து தன் பெற்றோருடன் வேறு ஊருக்கு மாறிப்போய்விட்டாள். பின்னர் நான் திருமணம் முடித்து  வேறூரில் கணவருடன் வாழ்ந்து வரும்போது  கடிதத்தொடர்போடு மட்டுமே இருந்தோம். நாட்டுச் சூழலால் சொந்த நாட்டை விட்டு நானும் பூங்குழலியும் திசைக்கொருவராய் பிரிந்துவிட்டோம்.  

நீண்ட காலமாக எங்கிருக்கிறாள் எனத்தெரியாமல் தொடர்பே இல்லாமல் வாழ்ந்து வரும்போது சில வருடங்களுக்கு முன்தான் அவளை பொது நிகழ்ச்சி ஒன்றில் தற்சமயம் கண்டு பேச்சிழந்து போனேன். இங்கு ஜேர்மனியில்தான் தன் கணவர் மகனுடன் வசித்து வருகிறாள். நாம் இருக்கும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட 500 கிலோமீற்றர் தூரத்தில். .. அடிக்கடி காணமுடியாதுவிட்டாலும் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். அவளுக்கு ஒரு திடீர் ஆச்சரியமாக இருக்க இங்கு அவளின் பிறந்ததினத்தை உங்களுடன் பகிர்ந்து அவளை வாழ்த்துகிறேன்.   

******************

பூங்குழலிக்காகச் செய்த வாழ்த்து மடலுக்கான க்விலிங்.
*******************

இதுவும் இன்னொருவருக்குச் செய்த வாழ்த்து மடலுக்கான க்விலிங்.
+++++++++++++++++++


காதலித்துப் பார்!   
............................

விழிகள் மோதி சிந்திச்சிதறி சிக்கிப் போகும் வார்த்தை
அனலேயானாலும் அடங்கமாட்டாமல் ஆளைக்கொல்லும் குளிர்
தரையில் நடக்காமல் உயரத்தாவிச்  சாதனை படைக்கும் வித்தை
மலையேசரிந்தாலும் வாய்மொழிமறந்து மௌனம்காக்கும் பிரமை
இவ்வுலகே தெரியாமல் தனியே சிரிக்கும் அழும் புலம்பும் பைத்தியம் 
காதலித்துப்பார்!   உன்னிடம் கணநேரத்தில் கவிதையும் பிறக்கும்!

காதல் நோய்
---------
அன்போடு தினம் ஏங்கி ஆருயிரை நாடி
இணைந்திடவே வேண்டி ஈரவிழிகள் மூடி
உயிரைக் கயிறாக்கி ஊஞ்சலில் மனதையாட்டி
எண்ணத்தில் இனிமைகூட்டி ஏக்கத்தை உதிரமாக்கி
ஐயமதை அகற்றி ஒன்றிணைந்திடப் போராடி
ஔடதந்தேட வைத்த  அன்பேயிந்தக் காதல்நோய்
 அஃதுதேதான் என்வாழ்விற்கும் ஆதாரமானதே...

``````````

எனக்கும் பூங்குழலிக்கும் பிடித்த எம்மைக் கவர்ந்த பாடல்:
------------------------------------------------------------------------------------------------------
உன்னிகிருஷ்ணனின் முதல் திரைப்பட பாடல். அருமையான குரல், இந்தப் பாடல் உன்னிகிருஷ்ணன் குரலுக்கு எழுதியது போலவே அமைந்ததுள்ளது. அருமையான இசை, அருமையான கவிதை. ஒவ்வொரு வரியும் அருமை.  ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு கதை சொல்லும். :-) 
திரைப்படம்: காதலன், இசையமைத்தவர்: ஏ.ஆர். ரஹ்மான், 
இயற்றிவர்: வைரமுத்து ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது...

=====00000=====

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)

Feb 8, 2013

மாறுபாடாக...

அதென்ன மாறுபாடாக என்று எண்ணத் தோன்றுமே...

இம்முறை கதை, கட்டுரை என்றில்லாமல் எனது க்விலிங் கைவேலைகளுடன் சொந்த முயற்சியான கவிதைகளுடனும் வந்திருக்கிறேன். அதைத்தான் மாறுபாடாக என்றேன்...:)

முதலில் இருப்பது லைன் ஆர்ட் என்று சொல்லப்படும் கோட்டுச் சித்திரம். அதை அப்படியே வெறும் கோடுகளாக க்விலிங் கை வேலையாகச் செய்திருக்கிறேன். கீழே கூகுளில் பெற்ற அந்தக் கோட்டுச்சித்திரத்தையும் இணைத்துள்ளேன். வேறு சிலர் வெவ்வேறு படங்களை இம்முறையில் வெவ்வேறு விதமான கற்பனைகளுடன் செய்திருக்கிறார்கள். நானும்  மாறுபாடாக என் கற்பனைக்குத் தோன்றியதைச் செய்துள்ளேன்.
==()==()==()==()==()==()==

மற்றுமொரு க்விலிங் வேலைப்பாடு...


~~~~~~~~~~~~~~~~~~~~~~

வாழ்க்கை...

கனவுகள் ஆயிரம் காட்சியாய்  தோன்றுமே
மனதினில் ஏக்கங்கள் மறுபடி மூளுமே
நினைவினில்  நிகழ்ந்தவை  நிழலாய்ப் போகவே
வினைதனை நொந்து மனம் வெறுமையில் வாடுமே

வதைபட்ட வாழ்வுதனில் வசந்தம் வீசுமா
சிதைபட்ட  சிற்பமதில் சிருங்காரம் தோன்றுமா
பதைக்கின்ற மனதோடு பண்பாட முடியுமா
விதைத்திட்ட விதையாவும் வீணாகிப் போனபின்னே...

வளமாக வாழ்ந்திடவே வனப்போடு காத்திருந்தோம்
பழமாகும் என்றே நாம் பசியோடு பார்த்திருந்தோம்
சுழலதில் சிக்கிய சருகாகி நம்வாழ்வு விதிசெயலால்
அழல்மேல் விழுந்த மெழுகாகிப் போனதுவே...
 - இளமதி -  
-----------------------------

நான் எழுதிய குறுங்கவிதையை கூகிளில் கிடைத்த படத்துடன் இணைத்துள்ளேன்.

 
வற்றிப்போன கண்களோடு
முற்றிய நினைவுச் சுமைகொண்டு
இற்றுப்போன வாழ்க்கையாகி
செற்றுப் போகிறேன் கணமும் நான்...
()()()()()()()()()()()()()()()()()()()()


என்னைக் கவர்ந்த பாடல்..:
 இப்பாடலைப் பாடும் எஸ் ஜானகி அம்மாவின் குரல் இதில் மிகமிக அருமையாக சோகத்தினை அப்படியே பிழிந்து தந்துள்ளது. அத்துடன் கவிஞர் கண்ணதாசனின் அற்புதமான வரிகள், இளையராஜாவின் இசை, ஸ்ரீதேவியின் நடிப்பு இப்படி அத்தனையும் அருமையாக இணைந்த நல்ல காட்சியுடனான அருமையான பாடல்...


%%%%%%%%%


படித்ததில் பிடித்தது....பகிர்ந்துகொள்ள விரும்பியது... 

எனக்குப் பிடித்த வரிகளை கூகிளாரிடம் பெற்ற படத்தில் இணைத்துள்ளேன். (நன்றி கூகிளாரே..:).

***********

குறிப்பு: நீங்கள் உங்கள் கருத்தினை பதிவு செய்ய தலையங்கத்தில் ஒருமுறை ”கிளிக்” பண்ணவும். ...மிக்க நன்றி..:)